நம்பர் பிளேட் அட்ராசிட்டி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
பெங்களூரு: வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் கட்சி கொடியோ லோகோவோ பதிவிட்டு, போக்குவரத்து விதிகளை மீறும் அவற்றின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கை: அதிகாரப்பூர்வ அரசு வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஏதேனும் லோகோவோ கட்சிக் கொடியோ பயன்படுத்தப்பட்டால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அபராதம் விதிப்பர். முதன் முறையாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை அதே நபர் சிக்கினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஏதேனும் எழுதி இருப்பதை பொது மக்கள் பார்த்தால், 94498 63459 என்ற 'வாட்ஸாப்' எண்ணுக்கு நம்பர் பிளேட்டை படம் எடுத்து அனுப்பலாம். இதன் மூலம் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அபராதம் விதிப்பர். எனவே, தங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள தேவையில்லாத பெயர்கள், கட்சி கொடிகள் போன்றவற்றை வாகன உரிமையாளர்கள் நீக்க வேண்டும். இதன் மூலம் அபராதம் கட்டாமல் தப்ப முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.