சிறுவனின் தற்கொலைக்கு ஜப்பானிய வெப் சீரிஸ் காரணம்?
சி.கே.அச்சுகட்டு: பெங்களூரின் சி.கே.அச்சுகட்டுவில் வசிக்கும் கணேஷ் பிரசாத், சவிதா தம்பதியின் இரண்டாவது மகன் காந்தர், 14. கணேஷ் பிரசாத் இசைக்கலைஞர்; அவரது மனைவி கிராமிய பாடகி. காந்தர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சவிதா கலை நிகழ்ச்சிக்காக, கடந்த 2ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். 4ம் தேதி, மகன் காந்தர், தன் அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து, சி.கே.அச்சுகட்டு போலீசார், விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. காந்தர் மொபைல் போனில், ஜப்பானிய மொழியின், 'டெத் நோட்' என்ற 'வெப் சீரிஸ்' பார்ப்பது வழக்கம். அதில் வரும் கதாபாத்திரத்தை தன் அறையில் வரைந்து வைத்துள்ளார். 'வெப் சீரிஸ்' பாதிப்பால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.