உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பகவத் கீதை படிக்க கூறியது தவறா? மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி

 பகவத் கீதை படிக்க கூறியது தவறா? மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி

: ''பெங்களூரு உட்பட மாநிலத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தால் பாழாகின்றனர். இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியே வர, மாணவர்களுக்கு பகவத் கீதை கற்பிக்க வேண்டும் என்று கூறியது தவறா?,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார். புதுடில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: சமூகம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை கவனித்து வருகிறோம். சிறந்த சமூகத்தை உருவாக்க, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பகவத் கீதையை கற்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மனுதர்மத்துக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? முதல்வர் சித்தராமையாவின் மனநிலை ஆபத்தானது. நல்ல எண்ணங்களை பற்றி விவாதிப்பதும், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கற்பிப்பதும் சரி தானே. பகவத் கீதையை கற்பிக்க கோரி, மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதுவது கூட குற்றமா? பகவத் கீதையை ஒருபோதும் அவமதித்ததில்லை; அவமதிக்கவும் மாட்டேன். தனிப்பட்ட தாக்கு மாநில பிரச்னை குறித்து விவாதிக்கும் போது, பகவத் கீதையை குறிப்பிட்டேன். இது அனைத்து குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதை அமைச்சர் மஹாதேவப்பா புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதால் எந்த பயனும் இல்லை. என்னால் முடிந்த வரை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை படித்திருக்கிறேன். பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர் மஹாத்மா காந்தி. கர்நாடகா போதை பொருள் வர்த்தகத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. மாநிலம் அனைத்து வர்த்தகங்களின் மையமாக மாறி வருகிறது. பள்ளி, கல்லுாரிகள் அருகில் போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர். இப்பழக்கத்தால் இளைய சமூகம் சீரழிந்து வருகிறது. மோசமான கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி கொள்கின்றனர். போலீஸ் அதிகாரிகளோ, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற விஷயங்கள் தலைப்பு செய்திகளாகி வருகின்றன. பெங்களூரு உட்பட மாநிலத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தால் பாழாகின்றனர். இத்தகைய மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியே வர, மாணவர்களுக்கு பகவத் கீதை கற்பிக்க வேண்டும் என்று கூறியது தவறா. ஒழுக்கம், கட்டுப்பாடு பகவத் கீதை நமக்கு அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை கற்பிக்கிறது. நல்ல எண்ணங்கள் மூலம் ஆளுமையை முழுமையாக்குகிறது. நானும் அரசியலமைப்பின் கீழ், ஒரு அமைச்சரானேன். நாம் அனைவரும் கடவுளின் பெயரால் சத்தியபிரமாணம் செய்கிறோம். நானும் அவ்வாறு செய்தேன். ஆனால் அமைச்சர் மஹாதேவப்பா, யார் பெயரில் சத்தியபிரமாணம் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. நான் யாரையும் மனுவாதியாக மாற சொல்லவில்லை. அதற்கு பதிலாக, பகவத் கீதையை படித்தால் நல்ல குணங்களை கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளேன். இதை திரித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை