கே.ஆர்.எஸ்., அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
ஒகேனக்கல்: கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 5:00 மணிக்கு, 70,000 கன அடி தண்ணீர் சென்றது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.நீர்வரத்து அதிகரிப்பால், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று ஆய்வு செய்தார்.இதற்கிடையில் மேட்டூர் அணை நிரம்பி விரைவில் உபரி நீர் திறக்க இருப்பதால், காவிரி கரையோரத்தில் உள்ள, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்பட, 11 மாவட்டங்களில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாண்டியா
நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., கொண்ட கே.ஆர்.எஸ்.,சில் நீர் இருப்பு 47.31 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 73,811 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 38,983 கனஅடி மட்டுமே திறந்துவிடப்பட்டது.தவிர, 19.52 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட கபினியில் 16.72 டி.எம்.சி., நீர் இருப்பு இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30,853 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 30,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரு அணையில் இருந்தும் 68,983 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் செல்கிறது.கே.ஆர்.எஸ்.சில் இருந்து நேற்று ஒரே நாளில் 12,127 கனஅடி தண்ணீர், குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.