உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்கள் நலனுக்காகவே உள்ளோம் பெங்களூரில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து

மக்கள் நலனுக்காகவே உள்ளோம் பெங்களூரில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து

பெங்களூரு: ''லோக்சபாவும், சட்டசபைகளும் மக்களின் பிரச்னைகளை விவாதிக்கவே உள்ளன. அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு பயன்படுத்த கூடாது,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பெங்களூரு விதான் சவுதாவில் 11வது சி.பி.ஏ., எனும் காமன்வெல்த் பார்லிமென்ட்ரி கூட்டமைப்பு மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா துவக்கி வைத்து பேசியதாவது: லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்டசபை கூட்டங்களில் தரமான விவாதங்களும்; ஆரோக்கியமான விமர்சனங்களும் மக்களிடம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்பதை ஒவ்வொரு பிரதிநிதியும் உணர வேண்டும். கருத்து வேறுபாடுகளில் ஒற்றுமை இருக்க வேண்டும். நாடு, மாநிலம், மக்களுக்கு நல்ல கொள்கைகள் வகுக்க, மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பெருமை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று சொல்வதில், நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் விவாதம் என்பது பிரிவினையை குறிக்காது. மாறாக, ஜனநாயகத்தின் உணர்வை குறிக்கும். பார்லிமென்ட் நடவடிக்கைகளில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகள், நல்ல விவாதங்களுக்கு இடையே ஏற்படும் குறுக்கீடுகள், ஒத்திவைப்புகள், ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும். இங்கு நடவடிக்கைகளும், விவாதங்களும் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. லோக்சபாவும், சட்டசபையும் மக்களின் பிரச்னைகளை விவாதிக்கவே உள்ளது. அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு பயன்படுத்த கூடாது. 22 மொழிகள் கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, அசாமி உட்பட 22 இந்திய மொழிகளில், பார்லிமென்ட் விவாத நடவடிக்கைகள் கிடைக்கின்றன. காமன்வெல்த் பார்லிமென்ட் கூட்டமைப்பு, 1980க்கும் மேற்பட்ட பார்லிமென்ட்கள், சட்டசபைகளின் கூட்டமைப்பாகும். 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கிளைகள் கொண்ட சி.பி.ஏ.,வின் ஒன்பது மண்டலத்தை உருவாக்கி உள்ளது. இதன் தலைவராக நான் உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ