தொழில்நுட்பத்தால் உலகிற்கு சேவை செய்வோம்: பெங்களூரு மாநாட்டில் முதல்வர் பேச்சு
பெங்களூரு: ‘‘உலகளாவிய நிறுவனங்கள் கர்நாடகா மீது நம்பிக்கை வைத்துள்ளன. தொழில்நுட்பம் வழியாக உலகிற்கு சேவை செய்வோம்,’’ என, தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் சிவகுமார் பேசினார். பெங்களூரு துமகூரு சாலையில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில், மூன்று நாட்கள் நடக்கும், 29வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு நேற்று துவங்கியது. ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் அதற்கு அப்பால்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடக்கும் மாநாட்டை, முதல்வர் சிவகுமார் துவக்கி வைத்து, பேசியதாவது: உலகின் மிக பெரிய தொழில்நுட்ப மையங்களில் பெங்களூரும் ஒன்று. உலகளாவிய நிறுவனங்கள், எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 2வது இடம்
மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் இந்தியா ஈட்டும் ஐந்து டாலர்களில், இரண்டு டாலர்கள் கர்நாடகாவில் இருந்து வருகின்றன. சமீப காலமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகா முன்னணியில் இருக்கிறது. இதுபற்றி பிரதமர் மோடியுடன் நான் விவாதித்தேன். இந்தியா வின் மிக அற்புதமான சாதனைகள், கர்நாடக மண்ணில் தான் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்திரயான் – 3, இந்தியாவின் சொந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்குவதில் பெங்களூரு ‘சர்வம்’ நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த உலகிற்கும் பயன்படும் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருகிறோம். தொழில்நுட்பத்தில் முதல் அடியை எடுத்து வைப்பதில், கர்நாடகா எப்போதும் முன்னணியில் உள்ளது. கர்நாடகாவில், 24 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு 5 பெரிய இந்திய நிறுவனங்களில், 2 நிறுவனங்கள் பெங்களூரில் துவங்கப்பட்டுள்ளன. உலகளாவிய ஸ்டார்ட் அப் சூழலில் கர்நாடகா 8வது இடத்திலும், ஆசியாவில் 2வது இடத்திலும் உள்ளது. மறுபயிற்சி
காங்கிரஸ் அரசு எலிவேட் திட்டத்தின் மூலம், 1,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 41 மில்லியன் டாலர் மானியம் வழங்கியுள்ளது. நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் அமைக்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம். ‘நிபுண கர்நாடகா’ என்ற திட்டம் மூலம், 33 ஆயிரம் பெண்களுக்கு திறன் மறுபயிற்சி அளிக்க உள்ளோம். கடந்த ஆண்டு மாநாட்டில் 67 நாடுகள் பங்கேற்றன. இந்த ஆண்டு 75 நாடுகள் பங்கேற்றுள்ளன. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளனர். தொழில்நுட்பம் வழியாக இந்தியாவிற்கும் உலகிற்கும் சேவை செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த தொழில்நுட்பம் தொடர்பான அரங்குகளை பார்வையிட்ட முதல்வர் சிவகுமார், ‘ரோபோ’ எனும் இயந்திர நாய்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.