இன்றும், நாளையும் மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு
பெங்களூரு: ‘அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், இன்றும், நாளையும் மழை நீடிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் இரட்டை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக அக்டோபர் 26, 27ம் தேதிகளில் கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும். பெங்களூரு, மைசூரு, குடகு, சாம்ராஜ்நகரில் மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் உள்ள காற்றழுத்தம் தீவிரமடைந்து, நாளை (இன்று) மேகமாக மாறும். இதன் தாக்கத்தால் மழையின் தீவிரம் அதிகரிக்கும். நாளை மறுநாள் (நாளை) சாதாரண மழை பெய்யும். நாள் முழுதும் மேகமூட்டமான வானிலை நிலவும். குளிர்ந்த காற்று வீசும். வட மாவட்டங்களில், வறண்ட வானிலை இருக்கும். வெப்பத்தின் தாக்கம் நிலவும். மாநிலத்தின் பல பகுதிகளில், காலை நேரத்தில் பனிப்பொழியும் அறிகுறி தென்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.