கரக திருவிழாவுக்கு பணம் நிதி எங்கே? அறநிலைய துறை, மாநகராட்சி மீது புகார்
பெங்களூரு : கரக திருவிழாவுக்கு 1.50 கோடி ரூபாய் விடுவிக்கவில்லை என்று, அறநிலைய துறை, மாநகராட்சி மீது தர்மராயா கோவில் நிர்வாகம் குற்றஞ்சாட்டி உள்ளது.பெங்களூரு நகரத்பேட்டில் தர்மராயா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒன்பது நாட்கள் நடந்த கரக திருவிழா, இன்று அதிகாலையுடன் நிறைவு பெற்றது. முன்னதாக நேற்று காலை, கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் சதீஷ் அளித்த பேட்டி:தர்மராயா கோவில் கரக திருவிழாவுக்கு, ஒவ்வொரு ஆண்டும் அரசு 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வந்தது. அந்த நிதி மாநகராட்சி, அறநிலையத்துறை சார்பில் எங்களுக்கு வழங்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு இதுவரை எங்களுக்கு பணம் வரவில்லை. கடந்த 8 நாட்களாக நடந்த திருவிழாவை நான், அர்ச்சகர், கமிட்டியினர் கையில் இருந்து பணம் போட்டு நடத்தி உள்ளோம்.நாங்கள் 65 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறோம். நேற்று முன்தினம் கேட்டபோது கூட, நேற்று நிதி ஒதுக்குவதாக, அறநிலைய அதிகாரிகள் கூறினர்.ஆனால் நேற்று 2வது சனிக்கிழமை. வங்கிகளுக்கு விடுமுறை. எப்படி நிதி ஒதுக்குவது என்று கேட்கின்றனர்? துணை முதல்வர் சிவகுமார், கரக திருவிழாவுக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி கூறி இருந்தார்.நிதி ஒதுக்குவதில் அறநிலைய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். சில அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி செய்கின்றனர். இதுபற்றி வெளியே சொல்ல கூடாது என்று இருந்தேன்.அரசு 1.50 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளது. அதனால் தான் இவ்வளவு பிரமாண்டமாக விழா நடத்துகின்றனர் என்று பேச்சு அடிபடுகிறது. மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தவே நான் கூறுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.