கே.ஆர்.எஸ்., அணைக்கு அடிக்கல் நாட்டியது யார்? காங்., அமைச்சர் மஹாதேவப்பா பேச்சால் சர்ச்சை
மாண்டியா: ''கே.ஆர்.எஸ்., அணை கட்ட முதன்முதலில் அடிக்கல் நாட்டியது, திப்பு சுல்தான்,'' என்று, அமைச்சர் மஹாதேவப்பா சர்ச்சை கருத்து தெரிவித்து உள்ளார். மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீர் கர்நாடகா, தமிழக விவசாயிகள் உயிர்நாடியாக உள்ளது. மைசூரு மன்னர் குடும்பத்தின் நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் ஆட்சி காலத்தில் கடந்த 1911ம் ஆண்டு அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 1932ல் அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், மாண்டியாவின் ஸ்ரீரங்கப் பட்டணாவில் நேற்று நடந்த, நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில், கர்நாடக சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா பேசியதாவது: கே.ஆர்.எஸ்., அணை கட்ட முதன் முதலில் அடிக்கல் நாட்டியவர் திப்பு சுல்தான் தான். இதுபற்றி அணையின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள கல்வெட்டு சொல்கிறது. ஆனால் இதுபற்றி யாரும் பேசுவது இல்லை. தேவதாசி முறை வரலாறு அறியாதவர்கள் வரலாற்றை உருவாக்க முடியாது என்று, அம்பேத்கர் கூறி உள்ளார். திப்பு சுல்தான் அனைத்து மதங்களையும் ஆதரிக்கும் சமநிலையான மனிதர். தேவதாசி முறையை அவர் ஒழித்தார். அவரது ஆட்சி காலத்தில் ஒரு அங்குல நிலம் கூட, பணக்காரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தினார். இவ்வாறு அவர் பேசினார். மஹாதேவப்பா பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுகுறித்து மன்னர் குடும்பத்தின் மைசூரு எம்.பி., யதுவீர் கூறுகையில், ''அமைச்சர் மஹாதேவப்பா உண்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும். அரசியலுக்காக அவர் எதுவும் பேச கூடாது,'' என்றார். மக்கள் ஆதங்கம் வரலாறு தெரியாமல் அமைச்சர் பேசுவதாக மைசூரு, மாண்டியா மக்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியை சேர்ந்த வரலாற்று நிபுணர்களும், அமைச்சர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் அணை கட்ட முயற்சி நடந்தது உண்மை தான். ஆனால் கே.ஆர்.எஸ்., அணையை கட்ட அவர் அடிக்கல் நாட்டவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளனர். மைசூரு மன்னர் குடும்பத்திற்கும், காங்கிரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. பெங்களூரு அரண்மனையின் நிலத்தை, சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்த அரசு முயற்சி செய்கிறது. மைசூருக்கு மன்னர் குடும்பத்தினரை விட, சித்தராமையா அதிக பங்களிப்பு அளித்து உள்ளார் என்று, அவரது மகன் யதீந்திரா சில நாட்களுக்கு முன்பு கூறினார். தற்போது மஹாதேவப்பா, கே.ஆர்.எஸ்., அணைக்கு அடிக்கல் நாட்டியது திப்பு சுல்தான் என்று கூறி, மன்னர் குடும்பத்துக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் பேசி இருக்கிறார்.