உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இலவச மின்சாரம் கொடுக்க சொன்னது யார்?

இலவச மின்சாரம் கொடுக்க சொன்னது யார்?

பெங்களூரு : கர்நாடகாவில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற பெஸ்காமின் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'உங்களை இலவச மின்சாரம் கொடுக்க சொன்னது யார்?' என கேள்வி எழுப்பி உள்ளது.தொட்டபல்லாபூரின் டி.பி.நாராயணப்பா லே - அவுட்டை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:புதிதாக கட்டப்பட்ட எங்கள் வீட்டுக்கு 'சிங்கிள் பேஸ்'க்கு பதிலாக, 'மூன்று பேஸ்' மீட்டராக மாற்றும்படி, பெஸ்காமில் விண்ணப்பித்திருந்தோம். இதற்கு பெஸ்காம் அதிகாரிகள், 'புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும்படி பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரவு

கே.இ.ஆர்.சி.எல்., எனும் கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம், 2025 ஏப்., 1ம் தேதி முதல் புது வீடு கட்டுவோர், 'ஸ்மார்ட் மீட்டர்'கள் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், பெஸ்காம் உதவி செயல் பொறியாளர், 'ஸ்மார்ட் மீட்டர்' வாங்கும்படி வற்புறுத்துகிறார். 2,000 ரூபாய் மதிப்பு உள்ள இந்த மீட்டர்கள், ஸ்மார்ட் மீட்டர் வினியோகிக்கும் ஏஜென்சிகள், 10,000 ரூபாய்க்கு விற்கின்றனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இம்மனு நேற்று முன்தினம், தனி நபர் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பு வக்கீல் பிரபுலிங்க நவதாகி வாதிடுகையில், ''ஸ்மார்ட் மீட்டர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில், 950 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுகின்றன. இருப்பினும், கர்நாடகாவில் 8,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.

இலவச மின்சாரம்

அப்போது நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:உங்களை இலவச மின்சாரம் கொடுக்க சொன்னது யார்? திடீரென விலையை எப்படி உயர்த்த முடியும்? அனைவராலும் அதிக பணம் செலுத்தி ஸ்மார்ட் மீட்டர் வாங்க முடியுமா? ஏழைகள் என்ன செய்வர்? இப்பிரச்னைக்கு இலவச வாக்குறுதித் திட்டங்கள் காரணமா?தற்காலிக இணைப்புகளுக்கு மட்டுமே ஸ்மார்ட் மீட்டர்கள் கட்டாயம் என்று கூறி, நிரந்தர இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ வலியுறுத்துவது சரியல்ல.வெளிப்புற ஒப்பந்ததாரர்கள் மூலம், இந்த ஸ்மார்ட் மீட்டர்களை வாங்குவது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. இது நுகர்வோருக்கு பெரும் சுமையாக இருக்கும். இது எப்படி நீதியாகும்?மனுதாரரின் மனுவுக்கு விளக்கம் அளிக்க, மின் துறை சார்பில் வாதிடும் வக்கீல், மாநில தலைமை செயலர், பெஸ்காம் நிர்வாக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற பெஸ்காம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை ஜூன் 7ம் தேதி நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ