ம.ஜ.த., தலைவர்களுடன் சிவகுமார் திடீர் நெருக்கம் ஏன்?
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; எதிரியும் இல்லை என்று சொல்வர். இது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ; கர்நாடக அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும். யார் எந்த கட்சியில் இருப்பர் என்று சொல்லவே முடியாது. இன்றைக்கு ஒரு கட்சியில் செல்வாக்குடன் இருப்பவர், நாளை வேறு கட்சிக்கு தாவி விடுவார். அங்கிருந்து இன்னொரு கட்சிக்கு சென்று விடுவார். இதனால் கர்நாடக அரசியல் வாதிகளின் மனநிலையை கணிப்பதே கஷ்டமாக இருக்கும். ஒவ்வொரு தேர்தலிலும், எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், ஒக்கலிகர் ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போட்டி ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த தேவகவுடா பிரதமர் பதவி வகித்தவர். ம.ஜ.த.,வின் தேசிய தலைவராக உள்ளார். இவரது மூத்த மகன் ரேவண்ணா, தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இளைய மகன் குமாரசாமி, மத்திய அமைச்சராக இருக்கிறார். தேவகவுடாவின் பேரன்களும் அரசியல் உள்ளனர். ஒக்கலிகர் சமூகத்தில் தேவகவுடா குடும்பத்திற்கு நல்ல பெயர் உள்ளது. இதுபோல கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரும், ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர் தான். அவருக்கும் சமூகத்தின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கிறது. சமூகத்தின் செல்வாக்கு, ஆதரவை பெறுவதில் தேவகவுடா, சிவகுமார் குடும்பத்தின் இடையே, 'நீயா, நானா' போட்டி உள்ளது. இந்த போட்டி இன்று, நேற்று இல்லை. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உள்ளது. தேவகவுடா குடும்பத்தை சிவகுமார் விமர்சிப்பதும்; சிவகுமாரை, தேவகவுடா மகன்கள் விமர்சிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக சிவகுமாரும், குமாரசாமியும் அரசியல் எதிரிகளாக உள்ளனர். நேரம் கிடைக்கும்போது ஒருவரை, ஒருவர் விமர்சிக்க தவறியதில்லை. பாலியல் வழக்கில் தேவகவுடாவின் மூத்த பேரன் பிரஜ்வல் சிறைக்கு சென்றதற்கு, சிவகுமார் தான் காரணம் என்றும், ம.ஜ.த., தலைவர்கள் விமர்சித்தனர். கைகுலுக்கல் நிலைமை இப்படி இருக்கும்போது, தேவகவுடா குடும்பம் மற்றும் ம.ஜ.த., தலைவர்கள் மீது, சிவகுமார் திடீரென கரிசனம் காட்ட துவங்கி உள்ளார். கடந்த மாதம் ஒக்கலிகர் சமூக மடாதிபதி சந்திரசேகரநாத சுவாமி மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்த தேவகவுடாவை, கையை பிடித்து சி வகுமார் அழைத்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, பெங்களூரில் நடந்த ஒக்கலிகர் சமூகத்தினர் ஆலோசனை கூட்டத்தில் சிவகுமாரும், குமாரசாமியும் அருகருகே அமர்ந்திருந்தனர். குமாரசாமியின் மகன் நிகிலிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார் சிவகுமார். இது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ம.ஜ.த., தலைவர்களுடன், சிவகுமார் நெருக்கம் காட்ட பல காரணங்கள் உள்ளன. கடந்த 2023 சட்டசபை தேர்தலின்போது, சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. ம.ஜ.த., கோட்டை என்று அழைக்கப்படும் தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. சிவகுமார் முதல்வர் ஆவார் என்று, ஒக்கலிகர் சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், சித்தராமையாவுக்கு பதவி கிடைத்தது. வரும் டிசம்பரில் முதல்வர் மாற்றம் நடக்கலாம் என்று, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். சித்தராமையாவுக்கு பின், முதல்வர் பதவியை பிடிக்க காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது. நல்லுறவு தன் சமூக ஆதரவை பெற்று, தன்னை வலுவான நபராக நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அரசியல் எதிரி என்றாலும் தேவகவுடா குடும்பத்தை, சிவகுமார் அரவணைத்துச் செல்கிறார். ஒக்கலிகர் மடாதிபதிகள் தேவகவுடா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். இக்குடும்பத்தின் மூலம் மடாதிபதிகளையும் தனக்கு ஆதரவாக பேச வைக்கலாம் என்று சிவகுமார் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக சிவகுமாரை, பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வில் உள்ள ஒக்கலிகர் சமூக தலைவர்கள் எதிர்த்தாலும், தனிப்பட்ட முறையில் நல்லுறவு உள்ளது. இதனால் இரு கட்சிகளின் ஒக்கலிக சமூக எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெறவும் சிவகுமார் நினைக்கிறார். தேவகவுடா குடும்பம் மட்டுமின்றி, அனைத்து ஒக்கலிகர் சமூக தலைவர்களுடன் நல்லுறவை பேண நினைத்துள்ளார். தன் அரசியல் எதிரிகள் என்று சிவகுமார் யாரையும் கூறியது இல்லை. 'அரசியலில் எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்' என்ற கருத்தை வலுவாக கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -