உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் டில்லி பயணம் ஏன்? அரசியல் ஆலோசகர் விளக்கம்

 முதல்வர் டில்லி பயணம் ஏன்? அரசியல் ஆலோசகர் விளக்கம்

கொப்பால்: “முதல்வர் சித்தராமையாவும், நானும் டெல்லியில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக செல்கிறோம்,” என, முதல்வரின் அரசியல் ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார். கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி: அமைச்சரவையில் இருந்து, யாரை நீக்க வேண்டும், யாரை சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுக்கும் முழு அதிகாரம், முதல்வர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மேலிடத்துக்கும் உள்ளது. மாநிலத்தில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஊடகங்களில் வரும் விஷயங்கள் வெறும் ஊகம். சித்தராமையா ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார். துணை முதல்வர் சிவகுமார், எங்கள் கட்சியின் மாநில தலைவர். அவர், முதல்வர் பதவி கேட்பதில் தவறில்லை. ஆனால் நான் சித்தராமையாவுக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். நவம்பர் 15ல் முதல்வர் சித்தராமையா, டில்லிக்கு செல்கிறார். அவருடன் நானும் செல்கிறேன். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க, நாங்கள் செல்லவில்லை. நவம்பர் 16ல் டில்லியில் நடக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக செல்கிறோம். டில்லி குண்டு வெடிப்பை, வன்மையாக கண்டிக்கிறேன். நன்கு படித்த டாக்டர்களே, இத்தகைய செயலை செய்திருப்பது வெட்கக்கேடு. இவர்கள் மனிதர்களே அல்ல. இந்த விஷயத்தில் மத்திய உள்துறையின் தோல்வி உள்ளது. டில்லியில் பயங்கரவாதம் நடக்கிறது என்றால், உள்துறை இருப்பது ஏன்? திறமையாக செயல்பட முடியவில்லை என்றால், அந்த துறையை நீக்க வேண்டும். நேர்மை இருந்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜினாமா செய்ய வேண்டும். நடந்த சம்பவத்துக்காக, நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி, மன்னிப்பு கேட்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து லட்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும், போன உயிர்கள் திரும்ப வராது. பாகிஸ்தானை பயங்கரவாதிகள் நாடு என, அறிவிக்கும் தைரியம், பிரதமர் மோடிக்கு உள்ளதா? பீஹார் தேர்தல் நேரத்தில், இப்படி நடந்திருக்க கூடாது. எனக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் உள்ளது. பா.ஜ.,வும், பிரதமர் மோடியும் பரிசுத்தமானவர்கள் அல்ல. அவர்கள் அதிகாரத்துக்காக, என்ன வேண்டுமானாலும் செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை