உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போட்டோ எடுப்பதில் தம்பதி தகராறு கணவரை ஆற்றில் தள்ளிய மனைவி

போட்டோ எடுப்பதில் தம்பதி தகராறு கணவரை ஆற்றில் தள்ளிய மனைவி

ராய்ச்சூர்: பாலத்தின் மீது நின்றபடி மொபைல் போனில் படம் எடுக்கும் போது, மனைவி ஆற்றில் தள்ளிவிட்டதில் உயிர் தப்பிய கணவர் மீட்கப்பட்டார். மீண்டும் இருவரும் ஒரே பைக்கில் புறப்பட்டு சென்றது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.ராய்ச்சூர் நகரின் சக்தி நகரை சேர்ந்த தடப்பாவுக்கும், யாத்கிர் மாவட்டம், தடகெரா கிராமத்தை சேர்ந்த கெத்தம்மாவுக்கும் இந்தாண்டு ஏப்ரல் 10ம் தேதி திருமணம் நடந்தது.

பாலத்தில் படம்

யாத்கிரில் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை, ராய்ச்சூருக்கு இரு சக்கர வாகனத்தில் தடப்பா அழைத்து சென்றார். ராய்ச்சூர் - யாத்கிர் மாவட்டங்களை இணைக்கும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குர்ஜாபூர் பாலத்தில் நின்றனர். கிருஷ்ணா ஆற்றில் அதிக நீர் சென்று கொண்டிருந்தது. இருவரும், படம் எடுக்க முடிவு செய்தனர்.வாகனத்தை நிறுத்தி விட்டு, முதலில் மனைவியை நிற்க வைத்து மொபைல் போனில் தடப்பா போட்டோ எடுத்தார். பின், தன்னை எடுக்கும்படி மனைவியிடம் மொபைல் போனை கொடுத்தார்.அப்போது கணவர் தடப்பாவை, மேம்பாலத்தின் இருந்து மனைவி ஆற்றில் தள்ளிவிட்டார். தனது மொபைல் போனில், தாயாருக்கு போன் செய்து, கணவர் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து விட்டதாக தெரிவித்தார்.ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்ட தடப்பா, குறுக்கே இருந்த பாறையை பிடித்து, அதில் ஏறி நின்று கொண்டார். பின், அவ்வழியாக சென்றவர்களை பார்த்து உதவி கேட்டு கூச்சலிட்டார். இதை பார்த்த அவர்கள், உடனடியாக பெரிய கயிற்றை கொண்டு வந்து வீசினர். கயிறை தடப்பாவின் இடுப்பில் கட்டிக் கொள்ளும்படி கூறினர். அவரும் அதையே செய்தார்.இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், தடப்பாவை மேலே துாக்கினர். இவை அனைத்தையும் மற்றவர்களை போன்று, தடப்பாவின் மனைவி பார்த்து கொண்டிருந்தார்.சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், இருவரிடம் விசாரித்தனர். அதற்கு தடப்பா, 'மனைவி தான் என்னை தள்ளி விட்டார்' என்றார். கெத்தம்மாவோ, 'நான் தள்ளிவிடவில்லை. அவராகவே தவறி விழுந்தார்' என்றார். பின், இருவரும் மொபைல் போனில் பேசியபடி, அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.இது குறித்து, போலீசில் தடப்பா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணா ஆற்றில் அதிகளவில் நீர் சென்று கொண்டிருந்தது. அத்துடன் இந்தாண்டு முதலைகளின் எண்ணிக்கையும் அதிகம். ஆற்றில் விழுந்து தடப்பா உயிர் தப்பியது அதிசயம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை