தீ வைத்து கணவரை கட்டி பிடித்த மனைவி
சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவின் குந்துார் கிராமத்தில் வசிப்பவர் மகேஷ், 30. இவரது மனைவி சுதா, 25. சுதா கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் பணியாற்றும் நிறுவனம், மைசூரின் டி.நரசிபுராவில் உள்ளது.தினமும் பணிக்கு சென்று வந்தார். அவ்வளவு துாரம் செல்ல வேண்டாம். கார்மென்ட்ஸ் வேலையை விட்டு விடும்படி, கணவர் கூறினார். சுதா சம்மதிக்கவில்லை. இதனால், தம்பதிக்கிடையே அவ்வப்போது சண்டை நடந்தது.வழக்கம் போன்று நேற்று முன் தினம் காலை, மனைவி பணிக்கு செல்ல தயாரானபோது, மகேஷ் தடுத்தார். மனம் நொந்த சுதா, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த மகேஷ், தீயை அணைக்க முயற்சித்தார். அப்போது மனைவி, கணவரை கட்டிப் பிடித்துக் கொண்டார்.இருவருக்கும் தீப்பிடித்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, தம்பதி தீக்காயங்களுடன் விழுந்து கிடந்தனர். தீயை அணைத்து உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.