அமைச்சரை ஆதரிக்காத கணவரை அறைந்த மனைவி
பெலகாவி : மாவட்ட கூட்டுறவு வங்கித் தேர்தலில், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை ஆதரிக்காததால், தன் கணவரின் சட்டைக்காலரை பிடித்து இழுத்து, கன்னத்தில் மனைவி அறைந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பெலகாவி மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு, இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. யாரை ஆதரிப்பது என, விவசாய கூட்டுறவு சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஹுக்கேரியில் நேற்று முன் தினம் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, தங்கள் ஆதரவாளர்களுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கத்தி வந்திருந்தனர். விவசாய சங்க உறுப்பினர் மாருதி சனதியும், கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இவர் மாவட்ட கூட்டுறவு வங்கித் தேர்தலில், முன்னாள் எம்.பி., ரமேஷ் கத்தியை ஆதரிப்பதாக கூறினார். அப்போது அங்கு வந்த மாருதி சனதியின் மனைவி, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை ஆதரிக்கும்படி பலவந்தப்படுத்தினார். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கோபமடைந்த மனைவி, அனைவரின் முன்னிலையிலும் கணவரின் சட்டையை பிடித்து இழுத்தது, கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை கண்டு தர்ம சங்கடத்துக்கு ஆளான அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு, தம்பதியை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது. அப்போது அவரது ஆதரவாளர்கள், மாருதி சனதியை தங்களுடன் அழைத்துச் சென்றனர். அதன்பின் ரமேஷ் கத்தியும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.