கணவரை துாக்கில் தொங்கவிட்ட மனைவி, கள்ளக்காதலன் கைது
மைசூரு: மைசூரில் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கொன்று, துாக்கில் தொங்கவிட்ட மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் இந்திரா கிராமத்தை சேர்ந்தவர் வீரண்ணா, 41. இவரது மனைவி சிவம்மா, 35. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சிவம்மாவுக்கும், எச்.டி.கோட்டேயை சேர்ந்த பலராமா என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த வீரண்ணா, மனைவியை கண்டித்தார். இது தொடர்பாக, கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முன் பஞ்சாயத்து நடந்தது. அப்போது, 'இனி பலராமாவை, சிவம்மா சந்திக்கக் கூடாது' என்று உத்தரவிட்டனர். ஆனாலும், இவர்களின் உறவு தொடர்ந்தது. இவ்விஷயம் தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே மீண்டும் சண்டை நடந்தது. அதன் பின், வீரண்ணா, உணவருந்தி விட்டு உறங்க சென்றுவிட்டார். திடீரென நள்ளிரவு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த சிவம்மா, தன் கணவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த ஹூல்லஹள்ளி போலீசார், அங்கு வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். சிவம்மாவிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். பின், சிவம்மாவுக்கும், பலராமாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை ஒப்புக் கொண்டார். சம்பவம் நடந்த அன்று இரவு வீரண்ணா துாங்கியதும், பலராமாவை சிவம்மா வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து அவரை கொன்றுள்ளனர். பின், வீரண்ணா கழுத்தில் சேலையை கட்டி, உடலை துாக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடமாடியுள்ளார். சிவம்மா, பலராமாவை போலீசார் கைது செய்தனர்.