கணவரை கொன்று உடல் எரிப்பு மனைவி, கள்ளக்காதலன் கைது
கொப்பால்: கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்து சடலத்தை எரித்துவிட்டு, தர்மஸ்தலா சென்றதாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். கொப்பால் பூதகும்பா கிராமத்தில் வசித்தவர் தாமண்ணா, 40. இவரது மனைவி நேத்ராவதி, 38. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். நேத்ராவதியின் சொந்த ஊர், காமனுாரா கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ஷியாமண்ணா, 40, என்பவருக்கும், நேத்ராவதிக்கும் திருமணத்துக்கு முன்பிருந்தே கள்ளத்தொடர்பு இருக்கிறது. திருமணத்துக்கு பின்னரும், அது தொடர்ந்தது. ஷியாமண்ணா அவ்வப்போது, நேத்ராவதியை காண பூதகும்பாவுக்கு வருவார். இது கணவர் தாமண்ணாவுக்கு தெரிந்தது. மனைவியை கண்டித்தார். எனவே இவரை கொலை செய்ய, ஷியாமண்ணாவும், நேத்ராவதியும் திட்டம் தீட்டினர். ஜூலை 25ம் தேதி, நிலத்துக்கு செல்லலாம் என, கூறி கணவரை நேத்ராவதி அழைத்து வந்தார். ஏற்கனவே அங்கு காத்திருந்த ஷியாமண்ணாவுடன் சேர்ந்து, இரும்பு ராடால், கணவரை தாக்கி கொலை செய்தார். பின் உடலை 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு துாக்கிச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அதன்பின் நேத்ராவதி வீட்டுக்கு வந்தார். கணவர் தர்மஸ்தலாவுக்கு சென்றிருப்பதாக கதை கட்டினார். யாருக்கும் சந்தேகம் எழாமல், நாக பஞ்சமி பண்டிகையை கொண்டாடினார். தர்மஸ்தலாவுக்கு சென்ற தாமண்ணா, ஐந்து நாட்களாகியும் வரவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது சகோதரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு, நேத்ராவதி நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் விசாரித்தபோது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின் அவரையும், ஷியாமண்ணாவையும் நேற்று கைது செய்தனர். தாமண்ணாவை எரித்த இடத்தை காட்டினர். அங்கிருந்த உடலை, உள்ளூர் போலீசார் அடையாளம் தெரியாத உடலாக கருதி, தகனம் செய்துவிட்டது தெரிந்தது.