உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆனேக்கல் தாலுகா வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பீதி

 ஆனேக்கல் தாலுகா வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பீதி

பெங்களூரு: கடந்த ஒரு வாரமாக, ஆனேக்கல் தாலுகா வனப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி தோப்பில், காட்டு யானைகள் முகாமிட்டு பொது மக்களை அச்சுறுத்துகின்றன. பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களின் நீலகிரி தோப்பில், ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் விவசாயிகளின் பயிர்களை மிதித்தும், தின்றும் அழிக்கின்றன. சாலைகளில் நடமாடி வாகன பயணியர் மற்றும் பாதசாரிகளுக்கும் தொந்தரவு தருகின்றன. இரவில் மீண்டும் நீலகிரி தோப்புக்கு செல்கின்றன. இதனால், விவசாயிகள் தோட்டத்துக்கு செல்ல முடியாமலும், பணிக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். சிறார்கள் இந்த சாலை வழியாகவே பள்ளிக்கு செல்கின்றனர். யானைகள் எப்போது தாக்குமோ என்ற பயத்துடன் நடமாடுகின்றனர். யானைகளை விரட்டும்படி, வனத்துறையிடம் மன்றாடினர். துறை ஊழியர்களும் கிராமத்துக்கு வந்து, நீலகிரி தோப்பில் இருந்த யானைகளை வனத்துக்கு விரட்ட முயற்சித்தனர். ஆனால், என்ன செய்தும் யானைகள் நகரவே இல்லை. இறுதியில் பட்டாசு வெடித்து விரட்ட முயற்சித்தனர். கோபமடைந்த யானைகள், பெருங்குரலில் பிளறியபடி, வனத்துறை ஊழியர்களை தாக்கின. பீதியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓடியதால், உயிர் பிழைத்தனர். யானைகள் நீலகிரி தோப்பை விட்டு அகலாமல் அங்கேயே தங்கியுள்ளன. உணவு தேடி தோப்பின் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்கின்றன. முத்தியாலமடுவு அருகே வீட்டு முன்பாக நின்றிருந்த இரண்டு பைக்குகளை, யானைகள் துாக்கி போட்டு உடைத்தன. இவற்றை விரட்ட முடியாமல், வனத்துறையினர் கையை பிசைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !