உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 18 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைத்தால் நெரிசல் குறையுமா? அரசுக்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கேள்வி

18 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைத்தால் நெரிசல் குறையுமா? அரசுக்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கேள்வி

பெங்களூரு: ''நகரில் 18 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை சாலை அமைத்தால், எப்படி போக்குவரத்து நெரிசல் குறையும்? பொதுமக்களின் பணத்தை வீணாக்காமல், பொது போக்குவரத்துக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரு நகரில் 18 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைப்பதால், எப்படி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்? முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் பணத்தை வீணாக்காமல், பொதுப் போக்குவரத்துக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். போக்குவரத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து எந்த ஆய்வும் செய்யவில்லை. நிபுணர்கள் சொல்வதை கேட்பதில்லை. பாதசாரிகள் இறப்பு நகர மக்கள்தொகையில், 70 சதவீதம் பேர், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய முடியும். புதிய திட்டங்களை துவங்குவதற்கு முன்பு, தாமதமான பணிகளை முடிக்க வேண்டும். பாதசாரிகளுக்கு நடைபாதைகள் இருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக சாலையில் நடந்து செல்லும் மக்களின் இறப்பு அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பெங்களூரு புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் விரிவாக்கம் அவசியம். ஆர்.வி., சாலையில் இருந்து பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் மெட்ரோ ரயில் வழித்தடத்தில், ரயில்கள் இயக்கப்பட்டது முதல், சில்க் போர்டு சந்திப்பில் இருந்து செல்லும் கார் போக்குவரத்து, 37 சதவீதம் குறைந்துள்ளது. நெரிசல் குறைப்பு இளஞ்சிவப்பு மெட்ரோ பாதையில், 12 முதல் 14 சதவீதம் போக்குவரத்து குறைந்துள்ளதாக அரசே தெரிவித்துள்ளது. எனவே, மெட்ரோ ரயில்பாதை விரிவாக்கத்தை தவிர, கார் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் எந்தவொரு சுரங்கப்பாதையும் அமைக்கக் கூடாது. விரிவான போக்குவரத்து திட்டத்தின் கீழ், நகரில் 300 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் தேவைப்படும். இதன் மூலம், ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்பட்டால், நகரின் மற்றொரு பக்கத்திற்கு ஐந்து நிமிடங்களில் சென்றுவிடலாம். இதனால் கார் பயன்பாடு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும். இது தான் பா.ஜ.,வின் மாற்று ஆலோசனை. தற்போது மெட்ரோ ரயிலில் தினசரி 10 லட்சம் பேரும்; பி.எம்.டி.சி.,யில் 45 லட்சம் பேரும் என, 55 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். எனவே, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். கலேன அக்ரஹாராவில் இருந்து நாகவாரா வரையிலான இளஞ்சிவப்பு மெட்ரோ திட்டம், 2020ல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவதாக, 2025 மார்ச் என்றனர்; இப்போது 2026 மார்ச் வரை நீட்டித்துள்ளனர். கடினமான பாறைகள் அதுபோன்று விமான நிலையத்தின் நீல நிற மெட்ரோ பாதை, தற்போது 2024ல் முடிய வேண்டிய பணி, 2027க்கு சென்றுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ பாதையும் சராசரியாக ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் தாமதமாகின்றன. இதற்கு பூமியில் கடினமான பாறை உள்ளது என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயிலுக்கு கடினமான பாறை உள்ளது என்று கூறுபவர்கள், சுரங்கப்பாதைக்கு மட்டும் மிருதுவான பாறையாக மாறுமா என்பதை கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி