என்னை திட்டியதற்காக விருது கிடைக்குமா?
பெங்களூரு: ''என்னை நாய் என விமர்சித்த சலவாதி நாராயணசாமிக்கு பத்ம பூஷன் விருது கிடைக்க போகிறதா,'' என, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஆவேசமாக பேசினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:என்னை, நாய் என விமர்சித்த சலவாதி நாராயணசாமிக்கு பத்ம பூஷன் விருது அல்லது பாரத ரத்னா விருது கிடைக்க போகிறதா. நான், நாய் அல்ல. அம்பேத்கருக்கு பிறந்த புலி. வரம்புக்கு உட்பட்டே பேசி வருகிறேன். ஆர்.எஸ்.எஸ்., உடை அணிந்த பிறகு சலவாதி, நீதிமானாக ஆகி விட்டாரா. என்னை பேச கூடாது என கூறுவதற்கு யாரும் உரிமை இல்லை.நீங்கள் பேசும் போது, அமைச்சரான நான் பேசக் கூடாதா. தங்க கடத்தல் வழக்கில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் குறித்து பேசுவதற்கு பா.ஜ.,விற்கு என்ன உரிமை உள்ளது. முதலில் முனிரத்னாவை கட்சியில் இருந்து வெளியில் அனுப்புங்கள்.அமலாக்கத்துறை சோதனை என்பது புதிது அல்ல. நாட்டில் 193 வழக்குகள் உள்ளன. இதில், இரண்டுக்கும் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியாலே அமலாக்கத்துறை சோதனைகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.