உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 10ம் வகுப்பு தேர்வில் மோசமான செயல்பாடு தங்கவயல் மீது தனி கவனம் காட்டப்படுமா?

10ம் வகுப்பு தேர்வில் மோசமான செயல்பாடு தங்கவயல் மீது தனி கவனம் காட்டப்படுமா?

தங்கவயல்: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மோசமான செயல்பாட்டால், தங்கவயல் மீது இனிமேலாவது கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்துவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. கல்வி மாவட்டங்கள் அடிப்படையில் கோலார் 68.47 சதவீதத்துடன் 14வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த 2021 - 2022ல் 94.53 சதவீதத்துடன் ஆறாவது இடம்; 2022 - 2023ல் 93.75 சதவீதத்துடன் ஆறாவது இடம்; 2023 - 2024ல் 73.57 சதவீதத்துடன் 20வது இடத்தை பிடித்து இருந்தது.ஆனால் இம்முறை 'டாப் 10' ல் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது தற்போது பொய்த்து உள்ளது. 2023 - 2024 ல் 73.57 சதவீதம் எடுத்தாலும், இம்முறை 68.37 சதவீதமாக குறைந்து உள்ளது. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பட்டதாரிகளின் நகரம் என்று அழைக்கப்படும் தங்கவயல் மாவட்ட அளவில் கடைசி இடத்தில் உள்ளது. சீனிவாசப்பூரில் 87 சதவீதம்; கோலாரில் 71.4 சதவீதம்; மாலுாரில் 69.42 சதவீதம்; முல்பாகலில் 66 சதவீதம்; பங்கார்பேட்டையில் 57.23 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். ஆனால் தங்கவயலில் 54.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தங்கவயலை சேர்ந்த ஆசிரியர்கள் தான், மற்ற தாலுகாக்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் தங்கவயல், தேர்வு முடிவில் மாவட்ட அளவில் கடைசி இடம் பிடித்து இருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. தங்கவயலில் உள்ள 55 பள்ளிகளில் இருந்து 3,052 மாணவர்கள் தேர்வு எழுதி, அதில் வெறும் 1,658 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். இப்படியே சென்றால் பட்டதாரிகளின் ஊர் என்ற பெயரை, தங்கவயல் இழந்து விடும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. 'இதனால் தங்கவயல் மீது கல்வி அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபாவும், கல்வி துறை அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவதுடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்' என்பது, தங்கவயல் மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை