பிரஜ்வல் விவகாரத்தால் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் விரிசல்?
பெங்களூரு: பாலியல் வழக்கில் பிரஜ்வலுக்கு தண்டனை கிடைத்து இருப்பதை வைத்து, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் விரிசல் ஏற்பட வைக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர்கள் தீவிர எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு உள்ளனர். தேசிய அளவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ம.ஜ.த., கட்சியும் உள்ளது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பு, இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டது. தேர்தலில் ம.ஜ.த., சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வலை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். 'பிரஜ்வலுக்கு போடும் ஓட்டு, எனக்கு போட்டது போல' என்றும் கூறி இருந்தார். தேர்தலின் போது பிரஜ்வல் தொடர்பான, ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காங்., அரசியல் இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து, ம.ஜ.த.,வை கழற்றி விட வேண்டும் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால், பா.ஜ., மேலிடம் எதையும் கண்டுகொள்ளவில்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 19 இடங்களில் வென்றது. ம.ஜ.த.,வின் குமாரசாமி, மத்திய கனரக தொழில் அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், பிரஜ்வல் தொடர்பான பாலியல் வழக்கில், நேற்று முன்தினம் நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனை விதித்தது. இதுபற்றி பா.ஜ., தலைவர்கள் வாயே திறக்கவே இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாக மட்டும் கூறி வருகின்றனர். பிரஜ்வலை பற்றி தனிப்பட்ட முறையில் யாருமே பேசவில்லை. இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்ய ஆரம்பித்து உள்ளது. பாதுகாவலர் ரவி துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பிரஜ்வலை பற்றி நான் பேசினால், அது அரசியலாகி விடும். கூட்டணி கட்சியில் உள்ள பா.ஜ., தலைவர்கள் கருத்து சொல்ல வேண்டும். அசோக், விஜயேந்திரா, சலவாதி நாராயணசாமி ஆகியோர் வாயை மூடி கொண்டு இருப்பது ஏன். பெண்களின் பாதுகாவலர் என்று பேசும் எம்.எல்.சி., ரவி எங்கே போனார்,'' என்றார். காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் தவறுகளால், அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என, ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய, கருத்து கணிப்பில் தெரிந்தது. தற்போதைய நிலை யில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்து அடுத்த தேர்தலில் போட்டியிட்டால், பிரஜ்வல் வழக்கை வைத்து காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இவ்விஷயத்தை இப்போதே கையில் எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர். எப்படியாவது பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை உடைத்து விட வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் கங்கணம் கட்டி உள்ளனர்.