பழைய வீடியோவை பதிவேற்றிய பெண் கைது
பெங்களூரு: உத்தர பிரதேசத்தில் நடந்த பழைய வீடியோவை, பெங்களூரில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, கோனனகுன்டேவை சேர்ந்தவர் ஷஹாஜஹான், 36. பெண்ணான இவர், சமூக வலைதளத்தின் தன் பக்கத்தில், 'பெங்களூரில் சிரிக்கும் ரவுடிகள்' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கார் ஒன்று இரு சக்கர வாகனங்கள் மீதும், தடுக்க வந்த நபர்கள் மீதும் மோதுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவை பலரும் பார்த்து, போலீசாருக்கு எதிராக கருத்துகள் தெரிவித்திருந்தனர். இதையறிந்த போலீசார், சம்பந்தப்பட்டவரின் சமூக வலைதளத்தை பார்த்தபோது, அந்த வீடியோ காட்சிகள், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 6ம் தேதி நடந்த சம்பவம் என்பது தெரிய வந்தது. ஷஹாஜஹானை கண்டுபிடித்த போலீசார், வீடியோ வெளியிட்டதற்கு விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், ''எனக்கு வலைதளத்தில் வந்த வீடியோவை, 'பார்வோர்டு' செய்தேன்,'' என்று கூறினார். பதிவேற்றிய வீடியோ பதிவு, உண்மையானதா என்பதை ஆராயாமல், வெளியிட்ட ஷஹாஜஹானை போலீசார் கைது செய்தனர். பின், அவரை எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர்.