குழந்தையை விற்ற பின் திரும்ப கேட்கும் பெண்
டி.ஜெ.ஹள்ளி: பணத்துக்காக தன் குழந்தையை விற்ற பெண், அந்த பணம் செலவானதும், குழந்தையை திருப்பி தரும்படி தொந்தரவு கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரின், டி.ஜெ.ஹள்ளியில் வசிப்பவர் தஸ்தகீர், 38. இவரது மனைவி நசீம் பேகம், 32. தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன், சிவாஜிநகரில் உள்ள கோஷா மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் பணத்தேவை இருந்ததால், குழந்தையை விற்க முடிவு செய்தனர். அமுதா மற்றும் ரம்யா ஆகியோருக்கு குழந்தையை விற்றனர். இதற்காக, 2.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டனர். அந்த பணத்தை குடும்ப தேவைக்கு பயன்படுத்தினர். பணம் செலவானதும் நசீம் பேகத்துக்கு, தன் குழந்தை மீது திடீர் பாசம் வந்துள்ளது. குழந்தையை திருப்பி தரும்படி தொந்தரவு செய்துள்ளார். இவரது நச்சரிப்பு தாங்காமல், டி.ஜெ.ஹள்ளி போலீஸ் நிலையத்தில், அமுதா, ரம்யா புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.