கரடியிடம் போராடி உயிர் பிழைத்த பெண்
தாவணகெரே : தன்னை தாக்கிய கரடியுடன், ஒரு பெண் திடமாக போராடி உயிர் பிழைத்தார். லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தாவணகெரே மாவட்டம், ஜகளூர் தாலுகாவின், ராஜேனஹள்ளி கிராமத்தில், தன் குடும்பத்துடன் வசிப்பவர் நேத்ராவதி, 35. இவர் கோபகொண்டனஹள்ளியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்கிறார். இவரது வீடு, அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளது. வீட்டில் கழிப்பறை இல்லாததால், வனப் பகுதிக்கு செல்வது வழக்கம். நேத்ராவதி நேற்று முன்தினம் காலையில், இயற்கை உபாதை கழிக்க தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு குட்டிகளுடன் எதிரே வந்த கரடி, நேத்ராவதி மீது பாய்ந்தது; கரடியுடன் போராடினார். சிறிது நேரத்துக்கு பின், அதை தள்ளி விட்டு ஓடினார். கரடியும் விரட்டி வந்தது. மேடு, பள்ளங்களில் விழுந்து, எழுந்து வனப்பகுதியில் இருந்து வெளியேறி, சாலைக்கு வந்தார். சிறிது துாரம் அவரை விரட்டி வந்த கரடி, வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. வெளியே சென்ற மகள், நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், தாய் எல்லம்மா தேடி சென்றார். வழியில் தண்ணீர் சொம்பு விழுந்து கிடந்தது. தொடர்ந்து தேடிய போது, சாலையில் காயங்களுடன் விழுந்திருந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த வழியாக வந்த தனியார் வாகனத்தில், மகளை அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார். கரடி தாக்குதலில் அப்பெண் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கரடியுடன் போராடி, உயிர் தப்பி வந்ததை குடும்பத்தினரிடம் விவரித்தார். கரடி நடமாட்டம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.