உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பூட்டிய வீட்டுக்குள் பெண் எலும்புக்கூடு: பாகல்குண்டே அருகே பரபரப்பு

 பூட்டிய வீட்டுக்குள் பெண் எலும்புக்கூடு: பாகல்குண்டே அருகே பரபரப்பு

பாகல்குன்டே: பூட்டிய வீட்டிற்குள் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பெங்களூரின், பாகல்குன்டேவின், ஹாவனுார் லே - அவுட்டில் வசித்து வந்தவர் உமேஷ், 62. இவரது மனைவி தாட்சாயிணி, 57. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2005ல் உயிரிழந்தார். இதனால் தாட்சாயிணி மனதளவில் பாதிப்படைந்தார். குடும்பத்தினர் அவருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முயற்சித்தனர். இந்நிலையில், உமேஷும் உடல்நிலை பாதிப்பால், 2017ல் உயிரிழந்தார். அதன்பின் தாட்சாயிணியின் மன அழுத்தம் அதிகரித்தது. மகனும், கணவரும் இறந்த பின், தாட்சாயிணி தனிமையால் வசித்தார். ஓராண்டாக இவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதை அக்கம், பக்கத்தினர் கவனிக்கவும் இல்லை. அவரது வீடு மூடியே இருந்தது. நேற்று முன் தினம், இரவு 8:00 மணியளவில், இந்த வீட்டுக்கதவு திறந்திருந்தது. உள்ளிருந்து துர்நாற்றமும் வீசியது. இதை கண்ட அப்பகுதியினர், திருடன் வீட்டுக்குள் புகுந்திருக்கலாம் என, நினைத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பாகல்குன்டே போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் பெண்ணின் எலும்பு கூடு கிடந்தது. அது தாட்சாயிணியுடையது என்பதை அப்பகுதியினர் உறுதிப்படுத்தினர். ஓராண்டுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தாட்சாயிணியின் தம்பி மகேஷுக்கு தகவல் கொடுத்தனர். அவருக்கும், சகோதரிக்கும் இரண்டு ஆண்டுகளாக தொடர்பே இருக்கவில்லை. அவருக்கு தன் சகோதரியின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை. போலீசார் எலும்புக்கூட்டை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வீட்டுக்குள் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதியினர் கிலி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !