உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகளிர் உலக கோப்பை போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்காது

மகளிர் உலக கோப்பை போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்காது

'மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்காது; மும்பை டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி., 50 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 30ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை, இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தெற்கு ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்கின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் வீராங்கனைகள் இந்தியாவில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகள் குவஹாத்தி அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க மைதானம், விசாகப்பட்டினம் ஏ.சி.ஏ., - வி.டி.சி.ஏ., கிரிக்கெட் மைதானம், இந்துார் ஹோல்கர் மைதானம், பெங்களூரு சின்னசாமி மைதானம், இலங்கை கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி, ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது பாதுகாப்பற்றதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடக்காது எனவும், அதற்கு பதிலாக மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் என, ஐ.சி.சி., அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் பிரசித்தி பெற்ற முக்கியமான லீக் போட்டிகளில் ஒன்றான உலக கோப்பை மகளிர் போட்டிகள் பெங்களூரில் நடக்கும் வாய்ப்பு பறிபோய் உள்ளது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை