விஜயநகரா: துங்கபத்ரா அணையில் பழைய ஷட்டர்களை நீக்கி, புதிதாக பொருத்தும் பணி, நேற்று துவங்கியது. அதற்கு முன்னதாக மஹா சுதர்ஷன ஹோமம் நடத்தப்பட்டது. விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின் புறநகரில் துங்கபத்ரா அணை உள்ளது. இந்த அணைக்கு மொத்தம் 33 மதகுகள் உள்ளன. கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின், எட்டு மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குகிறது. ஆறு லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு, நீர் பாய்ச்சுகிறது. கடந்த 2024ன் ஆகஸ்ட் 11ம் தேதி நள்ளிரவு, அணையின் 19வது மதகின் ஷட்டர் உடைந்தது. அதில் இருந்து பெருமளவில் தண்ணீர் வெளியேறியது. அதன்பின் தற்காலிக ஷட்டர் பொருத்தி, தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது. துங்கபத்ராவின் பல ஷட்டர்கள் சேதமடையும் நிலையில் உள்ளதால், இவற்றை மாற்ற வேண்டும் என, விவசாயிகள், நீர்ப்பாசன வல்லுநர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொடர் மழையாலும், அணையில் நீர் அதிகம் இருந்ததாலும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது மின் உற்பத்தி தேவைக்கு தண்ணீர் திறந்து விட்டு, அணையின் நீர் மட்டத்தை, 40 டி.எம்.சி.,யாக குறைத்து உள்ளனர். தற்போது ஷட்டர்களை மாற்றும் பணியை துவக்கியுள்ளனர். துங்கபத்ரா அணை வளாகத்தில், நேற்று காலை பணிகளை துவக்குவதற்கு முன், மஹா சுதர்ஷன ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விஜயநகரா மாவட்ட கலெக்டர் கவிதா, மன்னிகேரி, எஸ்.பி., ஜான்ஹவி, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், விவசாயிகள் உட்பட, பலர் பங்கேற்றனர். பூஜைகள் முடிந்த பின், பணிகள் துவக்கப்பட்டன. துங்கபத்ரா அணை மேம்பாட்டு ஆணைய செயலர் ரெட்டி அளித்த பேட்டி: துங்கபத்ரா அணையின் 33 மதகின் ஷட்டர்களை மாற்ற, நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக 52 கோடி ரூபாய் செலவிடப்படும். 33 ஷட்டர்களை அகற்றிவிட்டு, புதிதாக பொருத்தப்படும். பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குஜராத், ஆமதாபாத்தை சேர்ந்த ஹார்டுவேர் டூல்ஸ் அண்ட் மிஷினரி புராஜெக்ட் நிறுவனம், துங்கபத்ரா அணையின் மதகு ஷட்டர்களை மாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளது. மாதத்துக்கு எட்டு ஷட்டர்கள் பொருத்த, ஒப்பந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 20ம் தேதி, 18வது மதகு ஷட்டரை அகற்றிவிட்டு, புதிய ஷட்டர் பொருத்தப்படும். அதன்பின் ஒவ்வொரு ஷட்டராக அகற்றிவிட்டு, புதிய ஷட்டர் பொருத்தப்படும். ஒவ்வொரு ஷட்டரும், 50 டன்னுக்கும் அதிகமான எடை உள்ளது. 60 அடி அகலம், 20 அடி உயரம் கொண்டுள்ளது. வரும் மழைக்காலத்துக்கு முன், அனைத்து ஷட்டர்களும் மாற்றப்படும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.