நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று துவக்கம்
பெங்களூரு: நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் இன்று முதல் துவங்குவதாக, ஜி.பி.ஏ., அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். பெங்களூரில் உள்ள பல சாலைகளின் நடைபாதைகளை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இது, பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனால், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஜி.பி.ஏ., எனும் பெங்களூரு மாநகராட்சியின், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: வியாபாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தங்கள் கடைகளை வியாபாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று முதல் அதிரடியாக அகற்றப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படக்கூடிய இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் முதல் கட்டமாக அகற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.