உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 20 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!: தென்மேற்கு பருவ மழை தீவிரம் என தகவல்

20 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!: தென்மேற்கு பருவ மழை தீவிரம் என தகவல்

பெங்களூரு: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடகாவின் பீதர், கலபுரகி, விஜயபுரா, யாத்கிர் உட்பட 11 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும்; ராம்நகர், கோலார், பெங்களூரு நகரம் உட்பட 20 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மஞ்சள் எச்சரிக்கை!கடந்த சில நாட்களுக்கு முன், தென்மேற்கு வங்கக்கடலில் கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதால், பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்தது.இந்நிலையில், நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தீவிரம் அடைந்துள்ளதால், இன்று கர்நாடகாவின் வட மாவட்டங்களில் உள்ள பீதர், கலபுரகி, விஜயபுரா, யாத்கிர், ராய்ச்சூர், பாகல்கோட், கொப்பால், கதக், பெலகாவி, தார்வாட், ஹாவேரி ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.அதுபோன்று உத்தர கன்னடா, ஷிவமொக்கா, உடுப்பி, தட்சிண கன்னடா, குடகு, பல்லாரி, விஜயநகரா, தாவணகெரே, சித்ரதுர்கா, சிக்கமகளூரு, ஹாசன், துமகூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், சிக்கபல்லாபூர், ராம்நகர், கோலார், பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல் என 20 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய உள்ளதால், 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

அதிக மழை

ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பெய்யும் வழக்கமான மழையை விட, இம்முறை அதிகமாகவே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இதுவரை சராசரியாக 85.2 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்தாண்டு இதே காலகட்டத்தில், 100 செ.மீ., மழை அளவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவில் மற்ற மாவட்டங்களை விட, 310 செ.மீ., மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.மலைப்பகுதி மாவட்டங்களான ஷிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு, ஹாசனில் 155.6 செ.மீ., மழையும்; தெற்கு மாவட்டங்களான பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், ராம்நகர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், துமகூரு, கோலார், மாண்டியா ஆகிய பகுதிகளில் 36.9 செ.மீ., மழையும்; வட மாவட்டங்களான பெலகாவி, பீதர், விஜயபுரா, பாகல்கோட், தார்வாட், கதக், கலபுரகி, ஹாவேரி, கொப்பால், ராய்ச்சூர் ஆகிய பகுதிகளில் 47.9 செ.மீ., மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தத்தளித்த பெங்களூரு

இந்நிலையில், பெங்களூரில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாந்தி நகர், கே.ஆர்., மார்க்கெட், சிவாஜி நகர், ராஜாஜி நகர், லால்பாக், ஜெயநகர், வித்யாரண்யபுரா, கொட்டிகெரே உட்பட பல இடங்களில் கன மழை பெய்தது.மழையால், ஓல்டு ஏர்போர்ட் சாலையில் உள்ள கமாண்டோ மருத்துவமனையில் இருந்து ஏ.எஸ்.சி., மையம் சாலை வரையிலும்; டேனரி சாலை; வீரண்ணபாளையாவில் இருந்து ஹெப்பால் சதுக்கம் வரையிலும் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இருசக்கர வாகனங்களின் சைலென்சர், இன்ஜினுக்குள் மழைநீர் புகுந்ததால் பழுதடைந்து, அவற்றை வாகன ஓட்டிகள் தள்ளிச் செல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது. சிலர், வாகனங்களை சாலையின் ஓரத்திலும், சிலர் வாகன பார்க்கிங் பகுதிகளிலும் விட்டு விட்டு, ஆட்டோ, கார் மூலம் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.வீரண்ணபாளையா - ஹெப்பால்; வர்த்துார் - ஒயிட்பீல்டு; கஸ்துாரி நகர் - ஹெப்பால் பிரதான சாலை வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் வசித்தவர்கள், விடிய விடிய மழை நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள், முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை