| ADDED : டிச 30, 2025 06:45 AM
பெங்களூரு: பெங்களூரில் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. பெங்களூரில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் வட்டியை தள்ளுபடி செய்யும் வகையில், ஓ.டி.எஸ்., எனும் ஒரு முறை செட்டில்மென்ட் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால், நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது. முழு விலக்கு அளிக்கப்படும். இத்திட்டம் ஜனவரி முதல் மார்ச் வரை அமலில் இருக்கும் என, தெரிகிறது. இதைப் பயன்படுத்தி, வட்டித்தொகை இல்லாமல் குடிநீர் கட்டணத்தை செலுத்தலாம். ஆன்லைன் மூலமும் கட்டணத்தை செலுத்தலாம். இதுகுறித்து, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது: வாடிக்கையாளர்கள் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டண தொகையை முழுதுமாக ஒரே தவணையில் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது. இதற்காக, ஒரு பிரத்யேக செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவை அனைத்தும் துணை முதல்வர் சிவகுமார் வழிகாட்டுதல் படியே நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.