லாட்ஜில் வாலிபர் மர்ம சாவு காதலி தப்பியோட்டம்
மடிவாளா: காதலியுடன் லாட்ஜில் தங்கி இருந்த, வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தட்சிண கன்னடாவின் புத்துாரை சேர்ந்தவர் தக் ஷித், 20. இவரும், குடகின் விராஜ்பேட்டின் பிரியங்கா, 19, என்ற இளம்பெண்ணும் காதலித்தனர். கடந்த 9ம் தேதி இருவரும் பெங்களூரு வந்தனர். மடிவாளாவில் உள்ள லாட்ஜில் அறை எடுத்தனர். '10 நாட்கள் இங்கு தங்குவோம்' என்று கூறியிருந்தனர். அடிக்கடி லாட்ஜ் அறையில் இருந்து வெளியே சென்று வருவது; ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது என்று இருந்தனர். நேற்று முன்தினம் காலையில், லாட்ஜில் இருந்து பிரியங்கா மட்டும் தனியாக வெளியே சென்றார். இரவு ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், தக் ஷித் மொபைல் நம்பருக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. அறைக்கு சென்று கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. மடிவாளா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், இன்னொரு சாவி மூலம் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். படுக்கையில் துாங்கிய நிலையில் தக் ஷித் காணப்பட்டார். அவரை எழுப்ப முயன்றபோது, அவர் இறந்தது தெரிய வந்தது. அறையில் இருந்து 'புட் பாய்சன்' சரி செய்ய பயன்படுத்தப்படும், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு விஷமாக மாறியதால் அவர் இறந்தாரா அல்லது காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று இறந்தாரா, தக் ஷித் இறந்தது தெரிந்த பின், பிரியங்கா லாட்ஜில் இருந்து சென்றாரா அல்லது ஏதாவது தகராறு ஏற்பட்டு பிரியங்கா சென்ற விரக்தியில், தக் ஷித் தற்கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். லாட்ஜில் இருந்து சென்ற பிரியங்காவை போலீசார் தேடுகின்றனர்.