| ADDED : ஜூலை 16, 2024 10:35 AM
புதுடில்லி: மத்திய அரசின் அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில், 6 சதவீதம் மட்டுமே வாராக் கடனாக உள்ளதுமத்திய அரசின் அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில், 6 சதவீதம் மட்டுமே வாராக் கடனாக உள்ளது என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், இத்திட்டம் மத்திய அரசுக்கு பெரிய சுமையாக அமையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், 'அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம்' மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது, மருத்துவம் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட 28 துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 2023 மார்ச் மாதம் வரை செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 3.68 லட்சம் கோடி ரூபாய கடன் வழங்கப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய், அதாவது, 6 சதவீதம் மட்டுமே திருப்பி செலுத்தப்படாமல், வாராக் கடனாக உள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தும் போது, இதனால் மத்திய அரசுக்கு பெரும் சுமை ஏற்படும் என பலரால் கருதப்பட்டது. ஆனால் அப்படி எதிர்பார்த்தது போலல்லாமல், இத்திட்டம் மத்திய அரசுக்கு ஒரு சுமையாக மாறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.