உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காத நிதி செயல்பாடுகள்!

உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காத நிதி செயல்பாடுகள்!

தனிநபர்களின் கடன் தகுதியை தீர்மானிக்கும் அம்சங்களில் ஒன்றாக திகழும் கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவம் பரவலாக அறியப்பட்டதே. இதன் காரணமாகவே, கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் அம்சங்களை அறிந்து அவற்றை சரிசெய்வதில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. பில் தொகைகளை உரிய நேரத்தில் செலுத்துவது, மாதத்தவணையை தவறவிடாமல் இருப்பது, முறையான கிரெடிட் கார்டு பயன்பாடு உள்ளிட்டவை இந்த பட்டியலில் வருகின்றன. அதே நேரத்தில், கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் செலுத்தாத நிதி செயல்பாடுகளும் பல இருக்கின்றன. கிரெடிட் ஸ்கோரை திறம்பட நிர்வகிக்க இந்த அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர் விசாரணை:

தனிநபர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். இதற்காக எத்தனை முறை முயற்சித்தாலும், அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது. கடனுக்கான பல்வேறு கோரிக்கைகளே கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். கிரெடிட் ஸ்கோரை அறிவதற்கான கோரிக்கைகள் அல்ல.

காசோலை நிறுத்தம்:

ஏதேனும் காரணத்திற்காக காசோலை வழங்கிய பின், அதற்கான தொகையை நிறுத்தி வைக்க வங்கியிடம் கோரினால் அல்லது, காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தால் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது. மாதத்தவணைக்கு வழங்கப்பட்ட காசோலைகளுக்கு இது பொருந்தாது.

டெபிட் கார்டு:

கிரெடிட் கார்டை சிறப்பாக பயன்படுத்துவது, கிரெடிட் ஸ்கோரில் நல்லவிதமாக தாக்கம் செலுத்தும், மோசமான பயன்பாடு பாதிப்பை உண்டாக்கும். ஆனால், டெபிட் கார்டு பயன்பாடு கடன் வகையில் வராது என்பதால், இதை திறம்படக் கையாள்வது தாக்கம் செலுத்துவதில்லை.

கடன் ஆலோசனை:

கடன் சுமை அதிகரிக்கும்போது அல்லது கடன் நிர்வாகத்தை மேம்படுத்த கடன் ஆலோசகர்களை நாடுவது போன்ற செயல்களும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.மாறாக, தொழில்முறை கடன் ஆலோசனை பெறுவது, நிதி விவகாரங்களை மேலும் திறன்பட கையாள உதவும்.

வட்டி விகிதம்:

இதேபோல கடனுக்கான வட்டி விகிதம் உயர்வது, வங்கி கணக்கு செயலற்றுப் போவது, வருமானம் உயர்வு,விவாகரத்து பெறுவது உள்ளிட்ட அம்சங்களும் கடன் ஸ்கோர் மீது தாக்கம் செலுத்துவதில்லை. ஒருவருடைய வயது, பாலினம், இருப்பிடமும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி