உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / தீபாவளி போனசை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?

தீபாவளி போனசை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?

பண்டிகை கால போனஸ் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்கினாலும், அதை செலவு செய்வதில் கவனம் தேவை.தீபாவளி செலவுகளை திட்டமிடுவது போலவே, பண்டிகையை முன்னிட்டு கிடைக்கும் போனஸ் தொகையையும் சரியாக செலவு செய்வது அவசியம். பொதுவாக, போனஸ் தொகை எனும்போது பெரும்பாலானோர் அதை முழுதும் செலவு செய்யும் மனநிலை கொண்டிருப்பது வழக்கம். எனினும் இதற்கு மாறாக பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பழக்கம் தேவை என நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். போனஸ் பணத்தை, இஷ்டம் போல செலவு செய்யாமல், சிறந்த முறையில் பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறுகின்றனர்.

பட்ஜெட் வழி

போனஸ் பணத்தை செலவிடுவதற்கு முன், முதலில் அதை பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளும் உத்தி பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர். போனஸ் பணத்தில் 30 முதல் 40 சதவீதத் தொகையை, விரும்பிய பொருட்கள் வாங்க அல்லது வீடு புதுப்பித்தல் போன்ற செலவுகளுக்கு வைத்துக்கொள்ளலாம். பத்து சதவீதத் தொகையை, விடுமுறை பயணங்களுக்கு என ஒதுக்கலாம். இன்னொரு 30 சதவீதத் தொகையை, கடன் சுமையை குறைக்க பயன்படுத்திக்கொள்ளலாம். பத்து சதவீதம் தனிப்பட்ட தேவைகளுக்கும், எஞ்சிய பத்து சதவீதத்தை பரிசுப்பொருட்கள் வாங்க என வைத்துக்கொள்ளலாம்.போனஸ் பணத்தில், வாகனம் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க தீர்மானிப்பதற்கு முன், அதிக வட்டி கடன் இருந்தால் அதை அடைப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும். தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன் இருந்தால், ஒரு பகுதியை அதற்காக பயன்படுத்திக்கொள்வது கடன் சுமையை குறைக்க உதவும். வீட்டுக்கடன் பெற்றிருப்பவர்கள், அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தவும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். அவசர கால நிதி இல்லாதவர்கள் அத்தகைய நிதியை உருவாக்கிக் கொள்ள இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக லிக்விட் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

நிதி இலக்குகள்

கையில் உள்ள தொகையை பல்வேறு நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் சீரான முறையில் முதலீடு செய்திருந்தால் அதற்கான தொகையை அதிகரிக்கலாம். ஓய்வு கால இலக்கு அல்லது கல்வி செலவுக்கான நிதியை வலுவாக்கும் வகையிலும் முதலீடு செய்யலாம். டிஜிட்டல் வடிவில் தங்கம் வாங்குவதிலும் கவனம் செலுத்தலாம். குறுகிய கால இலக்குகளுக்கும் பொருத்தமான முதலீட்டை நாடலாம். முதலீடு விரிவாக்கத்திற்கும் இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், நீண்டகால பொறுப்பாக அமையக்கூடிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், போனஸ் என்பது நிச்சயமற்றது என்பதால் இது கூடுதல் சுமையாக மாறலாம். முக்கிய செலவுகளை தீர்மானித்த பிறகு பரிசுப்பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்க ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையெனில், எதிர்கால மேம்பாட்டிற்கான திறன் வளர்ச்சி பயிற்சிக்கும் செலவு செய்யலாம். போனஸ் தொகை வருமானத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால், வரிவிதிப்புக்கு உட்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நிதி இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிட்டு போனஸ் தொகையை பயன்படுத்திக்கொள்வது எதிர்கால பாதுகாப்பிற்கும் வழி வகுக்கும். போனஸ் தொகையை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம் என வருந்தும் நிலையையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை