வேளாண் ஸ்டார்ட்அப் துவங்க ரூ.1,000 கோடி நிதி நபார்டு வங்கி பொது மேலாளர் தகவல்
பொள்ளாச்சி:'விவசாய துறையில் புதிய சிந்தனைகளை கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், புதிய ஸ்டார்ட் அப் துவங்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் தெரிவித்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரியில், ஐந்தாவது பட்டமளிப்பு விழா நடந்தது. அதில், பங்கேற்ற சென்னை நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்த், நிருபர்களிடம் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு விவசாய துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும். விவசாய துறையில் புதிய சிந்தனைகள் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களை வரவேற்கும் விதமாக, 'ஸ்டார்ட்அப்' நிதியாக, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் சார்ந்த புதிய தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, இதுபோன்று திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வரும், 2047ல் உணவு தேவை அதிகமாக இருக்கும்; விவசாயத்தை பெருக்க வேண்டும். வேளாண் மாணவர்கள், புதிய சிந்தனைகள் வாயிலாக புதிய நிறுவனங்கள் துவங்கி அதை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், இதுபோல புதிய நிறுவனங்கள் துவங்க வேளாண் நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.