உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வங்கிகள் துணை நிறுவனம் துவங்க ஆர்.பி.ஐ., அனுமதி கட்டாயமல்ல

வங்கிகள் துணை நிறுவனம் துவங்க ஆர்.பி.ஐ., அனுமதி கட்டாயமல்ல

மும்பை : வங்கிகள் துணை நிறுவனங்களை துவங்க, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கட்டாயமல்ல என ஆர்.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: வங்கிகள், தங்கள் வர்த்தக வசதிகளுக்காக துணை நிறுவனங்களை துவங்குவதற்கு ஆர்.பி.ஐ.,யிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயமல்ல. ஆனால், காப்பீடு அல்லது சொத்து மேலாண்மை நிறுவனத்தை துவங்க, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., செபி உள்ளிட்ட அந்தந்த ஒழுங்குமுறை ஆணையங்களிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அம்சங்களை பரிசீலித்து வருகிறது. இதனால், வங்கிகள் தங்கள் வணிகத்தை எளிதாக மேற்கொள்ள இயலும். நிதி துறையின் விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதில் ஆர்.பி.ஐ., கவனம் செலுத்தி வருகிறது. இதன் வாயிலாக, வங்கி சேவைகள் மட்டுமின்றி எளிதாக தொழில் செய்யும் சூழல் ஏற்படுவதுடன் அவற்றின் வர்த்தகமும் விரிவடைய வாய்ப்பு ஏற்படும். கடந்த பல பத்தாண்டுகளாக, வங்கிகள் துணை நிறுவனம் துவங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்து வந்திருக்கிறது. வீட்டுக்கடன், அடமான கடன் ஆகியவற்றை மேற்கொள்ள தனியாக துணை நிறுவனத்தை துவங்கும் வங்கிகள், அந்த சேவைகளை வங்கிக்கிளைகளில் வழங்க முடியாது என்பதை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். இவ்வாறு கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ