ஆர்.பி.ஐ., வட்டி விகித முடிவு சந்தையின் போக்கை தீர்மானிக்கும்
கடந்த வாரம்
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, கடந்த அக்டோபரில் 3.10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 12.70 சதவீதம் சரிவை கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், இது 4.10 சதவீதமாக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில், இத்துறைகளின் வளர்ச்சி 8.8 சதவீதமாக பதிவாகி இருந்தது நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 46.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிதிப்பற்றாக்குறை 45 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கடந்த அக்டோபரில் வருவாய் செலவினங்கள் அதிகரித்ததே பற்றாக்குறைக்கு காரணமாகும் இந்திய பங்குச் சந்தையில் பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என, சந்தை பகுப்பாய்வு நிறுவனமான 'பெர்ன்ஸ்டீன்' தெரிவித்து உள்ளது. அதிக மதிப்பீடு, வருவாய் குறைவு காரணமாக சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது குறித்து, இப்போதைக்கு கூற முடியாது என்றும், விரைவில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளது கடந்த நவ.,28ம் தேதி, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 11,756 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று இருந்தனர். நவம்பரில் மட்டும் கிட்டத்தட்ட 42,490 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்து உள்ளனர். முன்னதாக, கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவாக 1.04 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்று இருந்தனர் பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடந்த அக்டோபரில், உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 8.08 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.37 கோடியாக அதிகரித்திருந்தது. கடந்தாண்டு இதே காலத்தில், 1.26 கோடி பேர், உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தி இருந்தனர் நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு, மாற்றமின்றி 6.80 சதவீதமாக தொடர்வதாக, 'எஸ் அண்டு பி., குளோபல்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம், 2025--26ம் நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பு, 6.90 சதவீதத்தில் இருந்து 6.70 சதவீதமாகவும், 2026-27ம் நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பு 7 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாகவும் குறைந்து உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1,050 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதமும், கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், 50 சதவீதமும் முதலீடு குறைந்துள்ளது உற்பத்தி துறை குறியீடுகள் சரிவால், செப்டம்பர் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக குறைந்தது. கடந்த ஏழு காலாண்டுகளில் காணாத சரிவாகும் இது. வரும் வாரம்
எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள், அன்னிய செலாவணி கையிருப்பு நிலவரம் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன எஸ் அண்டு பி., குளோபல் உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, ஜே.ஓ.எல்.டி., புதிய வேலை வாய்ப்புகள், ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, விவசாயமல்லாத பணிகளில் வேலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, மிச்சிகன் நுகர்வோர் மனோபாவம் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 314 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 27 புள்ளிகள் இறக்கத்துடனும்; புதனன்று 80 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 360 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று 216 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் அதாவது, திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில், 223 புள்ளிகள் ஏற்றத்துடன், நிப்டி நிறைவடைந்திருந்தது. வரும் வாரத்தில், ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு வெளிவர இருக்கின்றது. இது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சந்தை சார்ந்த செய்திகள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய உலக பங்கு சந்தைகளில் நடக்கும் ஏற்ற, இறக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே, சந்தையின் போக்கில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் பார்த்தால், வரும் வாரத்தில் நிப்டி, இறங்குவதற்கு தயங்கும் சூழலில் இருப்பதைப்போன்ற தோற்றம் தென்படுகின்றது. கடந்த வாரம் நிப்டி கண்ட வேகமான ஏற்ற இறக்கங்கள் மட்டுமே, இந்த டெக்னிக்கல் நிலைமைக்கு சாதகமானதாக இருக்கிறது. மறுபடியும் டெக்னிக்கல் அனாலிசிஸ் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனுமானங்கள், சரிவர செயல்படாமல் போவதற்கு வாய்ப்பிருக்கும் வாரத்தையே நாம் எதிர்கொள்ளப் போகிறோம். இதுபோன்று கணிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் காலகட்டத்தில், வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். சராசரியாக வர்த்தகம் செய்யும் அளவில், கால் பங்கிற்கும் குறைவான எண்ணிக்கையில் வர்த்தகம் செய்தல், மிகமிக குறுகிய அளவிலான நஷ்டம் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை தவறாமல் வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை, தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. சந்தையின் மீது தொடர்ந்து ஒரு கண்ணை வைத்துக்கொண்டே இருப்பது நல்லதொரு வர்த்தக ரீதியான அணுகலாக இருக்கும். நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 23,885, 23,638 மற்றும் 23,455 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 24,366, 24,601 மற்றும் 24,785 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,120 என்ற அளவிற்கு கீழே வராமல், தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.