புதுடில்லி:தங்க நகைக்கடன் வணிக நடைமுறையை சீர்படுத்தும் நோக்கில், வரைவு அறிக்கை ஒன்றை அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வங்கிகள், என்.பி.எஸ்.சி., எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் போன்றவை தற்போது தங்க நகைக்கடன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.இவற்றில் கடன் காலத்தை தன்னிச்சையாக நீட்டிப்பது அல்லது குறைப்பது, நகையை மதிப்பிடுவதில் வேறுபாடு, அடமான நகைகளின் பாதுகாப்பு, நகைக்கடன் தொகை நிர்ணயம் ஆகியவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் வேறுபடுகின்றன. தங்க நகை அடமானக் கடனில் முறைகேடுகள் நடப்பது தொடர்பாகவும் ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், தங்க நகைக்கடன் வணிகத்தை முறைப்படுத்தும் நோக்கில், வரைவு அறிக்கையை ஆர்.பி.ஐ., வெளியிட்டுள்ளது.தங்க நகைக்கடன் வணிகத்தில் மோசடிகள், முறைகேடுகள் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், கடன் வர்த்தகத்தை மேம்படுத்தி, இருதரப்பு பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த வரைவறிக்கை வெளியிடப்படுவதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. இதன் மீது பொதுமக்கள் தங்கள் கருத்தை ஆர்.பி.ஐ., இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
தங்கம், வெள்ளிக் கட்டிகள் மீது வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வழங்க அனுமதி இல்லை சந்தையில் வர்த்தகமாகும் இ.டி.எப்., மற்றும் மியூச்சுவல் பண்டு யூனிட்கள் மீது கடன் வழங்க அனுமதி இல்லை தங்க நகைகள், நாணயங்கள் எளிதில் பணமாக்கக்கூடியவை என்பதால் கடன் வழங்க அனுமதி கடன் கேட்பவரின் திருப்பிச் செலுத்தும் தகுதி அடிப்படையில், கடன் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் கடன் கேட்பவருக்கு நகைகள் சொந்தமானதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டால், கடன் வழங்கக்கூடாது தங்க நகை, நாணயத்தின் துாய்மை குறித்த சோதனைகள் தரமாக இருப்பது அவசியம் அதிகபட்சம் 12 மாத காலத்துக்கு மட்டுமே நகைக்கடன் வழங்கப்பட வேண்டும் ஒருவர் 1 கிலோவுக்கு கூடுதலாக நகைகளை அடமானம் வைக்க அனுமதி இல்லை நாணயமாக அடமானம் வைக்க, ஒருவருக்கு 50 கிராமுக்கு மேல் அனுமதி இல்லை குறைந்த காரட் தங்கம் மீது வழங்க அனுமதி இல்லை தனிநபருக்கு, கூட்டுறவு மற்றும் மண்டல கிராம வங்கிகள் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கலாம்.