பின்டெக் டவரில் இடங்கள் தயார் நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்
சென்னை: சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்காக தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் அமைத்து வரும், 'பின்டெக் டவரின்' கட்டுமான பணிகள் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் வங்கி, நிதி, காப்பீடு ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 110 ஏக்கரில், 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரை, 'டிட்கோ' அமைத்து வருகிறது. அங்கு, 236 கோடி ரூபாயில், 5.60 லட்சம் சதுர அடியில், 'பின்டெக் டவர்' எனப்படும் நிதிநுட்ப கோபுரத்தை நவீன கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இது, நிதி, நிதிநுட்ப நிறுவனங்களுக்கு முதல் தர அலுவலக பணியிடங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பின்டெக் டவர் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மாதம் நிறைவடைய உள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததும், பின்டெக் டவரில் உள்ள அலுவலக இடங்கள் நிதித்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை துவக்க, டிட்கோ ஒதுக்கீடு செய்ய உள்ளது. பின்டெக் டவரின் செயல்பாடுகளின் கண்காணிப்பு மற்றும் பராமரிக்கும் பணிகள் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டிட்கோ நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.