காசோலை கருப்பு மை வதந்திக்கு முற்றுப்புள்ளி
புதுடில்லி:காசோலையில் கருப்பு மை பயன்படுத்தக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளதாக, கடந்த சில நாட்களாக பரவி வந்த வதந்திக்கு, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ரிசர்வ் வங்கி இதுபோன்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும்;இது ஆதாரமற்ற, பொய்யான தகவல் என்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்துஉள்ளது. மேலும், எந்தெந்த வண்ண மைகளை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது. அச்சடிக்கப்பட்ட எழுத்துகளோடு குழப்பம் ஏற்படாமல் இருக்க, பொதுவாக காசோலையில் நீலம் மற்றும் கருப்பு மைகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது.