உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / மொத்த விலை பணவீக்கம் 0.13 சதவீதமாக குறைந்தது

மொத்த விலை பணவீக்கம் 0.13 சதவீதமாக குறைந்தது

புதுடில்லி,நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த செப்டம்பரில் 0.13 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 0.52 சதவீதமாகவும்; கடந்தாண்டு செப்டம்பரில் 1.91 சதவீதமாகவும் இருந்தது. உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் பிரிவில் தொடர்ந்து பணவாட்டமே நிலவுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.06 சதவீதமாக இருந்த பணவாட்டம், கடந்த மாதம் 5.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்க விகிதம் மைனஸில் செல்வதை பணவாட்டம் என்கின்றனர். அதாவது, பணவீக்கம் 0%க்கு கீழே குறைந்து எதிர்மறையாக மாறும் போது பணவாட்டம் ஏற்படுகிறது. காய்கறிகள், எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. ஜவுளி, ரசாயனம் உள்ளிட்ட தயாரிக்கப்பட்ட பொருட்கள் பிரிவு பணவீக்கம், கடந்த செப்டம்பரில் 2.33 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்த பணவீக்கம் 1.90 சதவீதம் என்ற 31 மாத உச்சத்தை கடந்த மாதம் எட்டியுள்ளது. தங்கம், வெள்ளி விலை உயர்வால் நகைகளின் விலை 34.10 சதவீதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சராசரி மொத்த விலை பணவீக்கம் 0.02 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த எட்டு காலாண்டுகளில் இதுவே குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை