சர்க்கரைக்கு சணல் சாக்குகள் கட்டாயம் நடைமுறைக்கு நிறுவனங்கள் எதிர்ப்பு உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு
கோல்கட்டா:சர்க்கரை ஆலைகள் தங்களது உற்பத்தியில் 20 சதவீதத்தை, கட்டாயமாக சணல் சாக்கு பைகளில் அடைத்து பயன்படுத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டுள்ளது.கடந்தாண்டு, அனைத்து சர்க்கரை ஆலைகளும் தங்கள் சர்க்கரை உற்பத்தியில் 20 சதவீதத்தை, சணல் சாக்கு பைகளில் அடைப்பது கட்டாயமாக்கி, மத்திய ஐவுளித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், மத்திய நுகர்வோர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பொது வினியோகத் துறை தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:சர்க்கரை இயற்கையாக ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும், சணல் சாக்கு பைகளில், ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இருப்பதால், சர்க்கரை கட்டியாக மாறி, நுகர்வுக்கு தகுதியற்றதாக மாறுகிறது. மேலும், நாட்டில் மூன்று பி.ஐ.எஸ்., உரிமம் பெற்ற சணல் சாக்கு பை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இருப்பதால், சர்க்கரை ஆலைகளுக்கு அதிக எண்ணிக்கையில் சணல் பைகளை வினியோகிக்க இயலாத சூழல் உள்ளது. இதனுடன், கரும்பு சீசனில், மொத்த சர்க்கரை உற்பத்தியில் 70 சதவீதம் மொத்த விற்பனையாளர் அல்லது நிறுவனங்களுக்கு செல்கின்றன. குறிப்பாக, பெப்சி, கோககோலா போன்ற பெரிய நிறுவனங்கள், சணல் பைகளில் வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, கட்டாய நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, மத்திய அரசின் மனுவை எதிர்த்து, கட்டாய நடைமுறையை தொடர வேண்டும் என, இந்திய சணல் ஆலைகள் கூட்டமைப்பு, ரிட் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.