உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கிடங்குகள் குத்தகை வணிகம் முன்னிலை வகிக்கும் சென்னை

கிடங்குகள் குத்தகை வணிகம் முன்னிலை வகிக்கும் சென்னை

புதுடில்லி:இந்திய அளவில் கிடங்கு குத்தகை வணிகத்தில் சென்னை முன்னிலை வகிப்பதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'நைட் பிராங்க் இந்தியா' தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு சென்னையில் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட கிடங்குகளின் அளவு 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்தாண்டு சென்னையில் கிடங்கு வணிக பரிவர்த்தனைகள் 29 சதவீதம் அதிகரித்தன. நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில் இதுவே அதிகபட்ச வளர்ச்சியாகும். சென்னையில் கடந்தாண்டு மொத்தம் 58 லட்சம் சதுர அடி அளவுக்கு கிடங்குகள் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில், 54 சதவீத பங்குடன் தயாரிப்பு துறை முதலிடம் வகிக்கிறது; சில்லரை தொழில் துறை மற்றும் இ - காமர்ஸ் துறை இதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. கடந்த 2023 உடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு தயாரிப்பு துறையின் கிடங்கு அளவு 103 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, நாட்டின் முக்கிய தயாரிப்பு மற்றும் தொழில் துறை மையமாக சென்னை தொடர்ந்து விளங்குவதை உறுதிப்படுத்துகிறது. சில்லரை விற்பனை துறையினரின் கிடங்கு அளவு 94 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வளர்ந்து வரும் நுகர்வோர் தேவை மற்றும் தொலைதுாரப் பகுதிகளுக்கும் பொருட்களை கொண்டு சென்று வழங்குவது அதிகரித்துள்ளதால், இ - காமர்ஸ் துறையின் கிடங்கு அளவு 1,158 சதவீதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிடங்கு வாடகை 2024ல், சதுர அடிக்கு 2 சதவீதம் அதிகரித்து 23.90 ரூபாயாக இருந்தது ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் வழித்தடத்தில் 61 சதவீத சேமிப்பு கிடங்குகள் அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை