ஜி.எஸ்.டி., வந்தபின் மற்ற வரிகள் குறைந்தன இயக்குநர் ஜெனரல் மகேஷ்குமார் ரஸ்தகி பேச்சு
மதுரை:''பொருளாதார வளர்ச்சிக்கு வரி விதிப்புகள் தேவை. ஜி.எஸ்.டி., வந்தபின் மற்ற வரிகள் குறைந்தன'' என மதுரையில் சி.ஐ.ஐ., நடத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்பு ஜி.எஸ்.டி. முகாமில், வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரக இயக்குநர் ஜெனரல் மகேஷ்குமார் ரஸ்தகி பேசினார்.முகாமில் வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரக முதன்மை கூடுதல் இயக்குநர் ஜெனரல் நீரவ்குமார் மல்லிக் பேசுகையில், ''மத்திய அரசு எம்.எஸ்.எம்.இ.,க்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீத பங்கு, இத்தகைய நிறுவனங்கள் வாயிலாகக் கிடைக்கிறது. அதில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதம்''என்றார்.இயக்குநர் ஜெனரல் மகேஷ்குமார் ரஸ்தகி பேசியதாவது: ஜி.எஸ்.டி.,க்கு முன்பு பல்வேறு வரிகள் அதிகமாக இருந்தன. ஜி.எஸ்.டி., வந்தபின் மற்ற வரிகள் குறைந்தன. உண்மையாகவே இதுதான் நல்ல வரி முறை. பொருளாதார வளர்ச்சிக்கு வரி விதிப்புகள் தேவை.வரி விதிப்பு என்பது பூவில் இருந்து தேனீக்கள் தேன், மகரந்தம் எடுப்பது போல தான். முன்புடன் ஒப்பிடும் போது கல்விக்கு தேவையான பொருட்களுக்கு வரி குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., செலுத்துபவர்களுக்கு கலவை வரி உட்பட நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுஉள்ளன. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கியூ.ஆர்.எம்.பி., எனப்படும் காலாண்டு வரி செலுத்தும் முறையை கொண்டு வந்து, மத்திய அரசுஊக்கப்படுத்துகிறது. வரி செலுத்துவோர் நவீன தொழில்நுட்பங்களை கையாள வேண்டும். வரி செலுத்துவோருக்காக மாதந்தோறும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.'சி.பி.ஐ.சி. இந்தியா' இணையதளத்தில் மட்டுமல்ல; வாட்ஸாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ஜி.எஸ்.டி., குறித்து நிறைய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. எளியமுறையில் வணிகம் செய்வதற்கு தேவையான வரி முறைகளை மத்திய அரசுகையாள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.