உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்வு

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், 2.01 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்யப்பட்டதை, ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகமான டி.ஜி.ஜி.ஐ., கண்டுபிடித்து உள்ளது.இது தொடர்பாக டி.ஜி.ஜி.ஐ., வெளியிட்ட ஆண்டு அறிக்கை:கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 1.01 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, 4,872 வழக்குகள் பதியப்பட்டன. அதுவே, 2023 - 24ம் நிதியாண்டில் இருமடங்காக அதிகரித்து, 2.01 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏய்ப்புகள் கண்டறியப்பட்டு, 6,084 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், வரி செலுத்தாதது, வர்த்தக மதிப்பை குறைத்துக் காட்டுதல் ஆகியவை அதிகபட்சமாக 46 சதவீதமாகும். ஜி.எஸ்.டி., ஏய்ப்பில், ஆன்லைன் விளையாட்டு, வங்கி, நிதிச்சேவை மற்றும் காப்பீடு துறை நிறுவனங்கள் அதிக பங்கு வகித்தன. இரும்பு, தாமிரம், பழைய பொருட்கள், அலாய் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் கண்டறியப்பட்டன.பான் மசாலா, புகையிலை, சிகரெட், பீடி, டைல்ஸ் ஆகியவை தொடர்பாக, 212 வழக்குகள் பதியப்பட்டன. பிளைவுட், டிம்பர் மற்றும் பேப்பர் தொடர்பான நிறுவனங்கள் மீது, 238 வழக்குகளும்; மார்பிள், கிரானைட் நிறுவனங்கள் மீது, 235 வழக்குகளும் பதிவாகின. அதிகபட்சமாக, ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக, 78 வழக்குகளே பதிவானபோதும், 81,875 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 171 வழக்குகளில் 18,961 கோடி ரூபாயுடன் வங்கி, நிதிச்சேவை மற்றும் காப்பீடு துறை நிறுவனங்கள், வரி ஏய்ப்பில் இரண்டாம் இடம் பிடித்தன.இவ்வாறு ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ