செபி மாதவி மீது வழக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
மும்பை:'செபி' முன்னாள் தலைவர் மாதவி புரி புச் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கடந்த, 1994ல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதில் மோசடி நடந்ததாக, சபன் ஸ்ரீவத்சவா என்ற பத்திரிகை நிருபர் புகார் அளித்திருந்தார்.இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, மும்பை சிறப்பு நீதிமன்றம், செபியின் முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, கடந்த, 1ம் தேதி உத்தரவிட்டது.இதை எதிர்த்து இவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 1994ல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தற்போது பதவியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் சமீபத்தில் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மாதவி புரி புச் உள்ளிட்டோர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும் என, மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர்களுடைய பங்கு என்ன என்பது குறிப்பிடவில்லை. அதை ஆய்வு செய்யாமல், இயந்திரத்தனமாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கின் விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை, சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார்தாரர், தன் தரப்பு வாதங்களை அதற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.