பண்டிகை காலத்தை முன்னிட்டு பால் பொருள் மீது கண்காணிப்பு
புதுடில்லி:பண்டிகை காலத்தை ஒட்டி, பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, பாலுக்கு பதிலாக அதே போன்ற தோற்றமுடைய, சுவையுடைய பொருட்கள் சேர்க்கப்பட்டாலும், அதை பால் பொருட்களாக கருதக்கூடாது. மேலும், பால் பொருட்கள் அல்லாதவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களை, பால் அல்லது பாலில் இருந்து தயாரான பொருட்கள் என தயாரிப்பாளர்கள் குறிப்பிடக் கூடாது என விதிகள் உள்ளன. எனவே, நாடு முழுதும் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்வதோடு, பால் பொருட்களுக்கு கடுமையான தர பரிசோதனை மற்றும் கள ஆய்வை மேற்கொண்டு, நுகர்வோர் ஏமாறுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.