உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிறுதொழில் நிறுவன கடன் தனியார் வங்கிகள் முன்னிலை

சிறுதொழில் நிறுவன கடன் தனியார் வங்கிகள் முன்னிலை

புதுடில்லி:எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில், தனியார் துறை வங்கிகள் முன்னிலை வகிப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான வங்கி துறையின் கடன் வழங்கல், கடந்த 2019ல் 10.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்தாண்டு 21 லட்சம் கோடி ரூபாயாக இரட்டிப்பாகிஉள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் துறை வங்கிகள், எம்.எஸ்.எம்.இ., துறையினருக்கு வழங்கிய கடனின் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2019ல் 4.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு, கடந்தாண்டு 12.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் எம்.எஸ்.எம்.இ., கடன் வழங்கல், 5.50 லட்சம் கோடியிலிருந்து 7.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடன் அளிப்பில் மாற்றம்

வழக்கமாக பொதுத்துறை வங்கிகளே எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கும் நிலையில், தனியார் வங்கிகள் அதிக பங்கு வகிப்பது, இத்துறைக்கான கடன் வழங்கலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறது. விரைவாக கடன் வழங்குதல், பிணையில்லா கடன் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கடன் திட்டங்களால் தனியார் துறை வங்கிகள் தங்களது கடன் வழங்கும் திறனை மேம்படுத்தியுள்ளதாக வங்கி துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ