வர்த்தக துளிகள்
'செயின்ட் கோபைன்' சந்தானம் மே மாதம் ஓய்வு பெறுகிறார்
'செயின்ட் கோபைன்' நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பி.சந்தானம், வரும் மே மாதம் 5ம் தேதி ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழக தொழில்துறை வட்டாரங்களில் மிகவும் பிரபலமான இவர், கடந்த 45 ஆண்டு காலமாக செயின்ட் கோபைன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வரும் காலங்களில் தன் அனுபவங்களைக் கொண்டு, வளர்ந்த நாடாக உருவெடுத்து வரும் இந்தியாவின் பயணத்தில் முக்கிய பங்காற்ற விரும்புவதாக, அவர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மாநிலத்தில் 3,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய, சந்தானம் தலைமையிலான செயின்ட் கோபைன் நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் மைக்ரோமேக்ஸ்
மொபைல் போன் தயாரிப்பில் பிரபலமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம், 'ஸ்டார்ட்அப் எனர்ஜி' என்ற நிறுவனத்தின் வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கால்பதித்துள்ளது. துாய்மை எரிசக்தியை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தில் முக்கிய பங்காற்றும் விதமாக இந்நிறுவனம் துவங்கப்பட்டுள்ளதாக, மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. வீடு, வணிகம் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப, அதிக திறன் கொண்ட சோலார் பேனல் தயாரிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஜிகாவாட் சோலார் மாட்யூல் உற்பத்தி திறனை உருவாக்க, சீனாவின் ஜின்சென் நிறுவனத்துடன் மைக்ரோமேக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டி.வி., டுடே எப்.எம்., ரேடியோ வணிகம் ரூ. 20 கோடிக்கு விற்க முடிவு
டி.வி., டுடே நிறுவனம், இஷ்க் எப்.எம்., என்ற பெயரில் இயங்கி வரும் தன் எப்.எம்., ரேடியோ வணிகத்தை, கிரியேட்டிவ் சேனல் நிறுவனத்துக்கு 20 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இதற்கு நிறுவனத்தின் இயக்குனர்களின் சிறப்பு குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மும்பை, டில்லி, கோல்கட்டா ஆகிய மூன்று நகரங்களில் 104.8 என்ற அலைவரிசையில் இயங்கி வரும் எப்.எம்., ஸ்டேஷன்கள், கிரியேட்டிவ் சேனல் அட்வர்டைசிங் அண்டு மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது 10 கோடி ரூபாயும், ஒப்பந்தம் நிறைவேறிய பின் 10 கோடி ரூபாயும் கைமாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
கோககோலா இந்தியா வணிகத்தை வாங்க பேச்சு
அமெரிக்காவைச் சேர்ந்த கோககோலா நிறுவனத்தின் இந்திய வணிகத்தில் 40 சதவீத பங்குகளை வாங்க, ஜுபிலன்ட் பார்தியா குழுமமும், கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியும் கைகோர்க்க பேச்சு நடத்தி வருகின்றன. ஹிந்துஸ்தான் கோககோலா ஹோல்டிங்ஸ் என அழைக்கப்படும் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க, இந்திய போட்டி ஆணையத்தின் ஒப்புதல் கோரி விண்ணப்பித்துள்ளன. ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் 3,500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய தயாராக உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில், சில ஆண்டுகளில் ஹிந்துஸ்தான் கோககோலா வணிகத்தை இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிட்டு, கோல்ட்மேன் சாக்ஸ் வெளியேறும் என கூறப்படுகிறது.